வடமராட்சி கடலில் தொடரும் சோகம்
மூழ்கிய படகுக்குள் மீனவர்கள்
சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகம்
– 2ஆவது நாளாக 24 படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகளுடன் தேடுதல்
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்களைத் தேடும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் ஆழ்கடல் சுழியோடிகள் சகிதம் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52), சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) மற்றும் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54), அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் ஆகிய நான்கு மீனவர்களுமே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இரு பகுதிகளில் இருந்தும் 10 படகுகளில் சென்ற உள்ளூர் மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, ஒரு படகு வலைகளுடன் கடலில் மூழ்கிய நிலையில் இருப்பதை மீனவர்கள் நேரில் கண்டறிந்துள்ளனர். அத்துடன், கடலில் மிதந்த ஒரு பகுதி வலைகள் மற்றும் சில மீன்பிடி உபகரணங்களை மீட்டு நேற்று மாலை கரைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில், படகு மூழ்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை காலை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து 24 விசைப்படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகள் (சுழியோடி மீனவர்கள்) சகிதம் பெருமளவிலான மீனவர்கள், படகு மூழ்கிய இடத்தை நோக்கி விரைந்துள்ளனர்.
மூழ்கிய படகுக்குள் மீனவர்கள் சிக்கியிருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தின் அடிப்படையில், சுழியோடிகளின் உதவியுடன் கடலுக்கு அடியில் இறங்கித் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நகரபிதாவின் அவசர உதவிகள் – கடற்படை மீது தொடரும் அதிருப்தி:
மீனவர்கள் காணாமல் போனது முதல் பருத்தித்துறை முன்னாள் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உரிய தரப்பினருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும், தேடுதல் பணிகளுக்காகக் கடலுக்குச் செல்லும் 24 படகுகளுக்குத் தேவையான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளையும் அவர் முன்னின்று வழங்கி வருகின்றார்.
இதேவேளை, மீனவர்கள் காணாமல்போய் 24 மணித்தியாலங்களுக்கும் மேலாகக் கடந்துள்ள நிலையிலும், அதிநவீன வசதிகளைக் கொண்ட இலங்கை கடற்படையினரோ அல்லது கடற்றொழில் அமைச்சரோ இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ மீட்பு நடவடிக்கைகளையும் எடுக்காமை குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் சக மீனவர்களும் தங்களின் கடுமையான அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து நிலைமைகளைக் கேட்டறிந்து, அநர்த்த முகாமைத்துவப் பிரிவினருக்கு அழுத்தம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடலில் மூழ்கிய படகை மீட்கவும், மீனவர்களின் நிலையை அறியவும் வடமராட்சி மக்கள் சோகத்துடன் கடற்கரையில் காத்திருக்கின்றனர்.










