” 2 ஆம் உலகப்போரின்போது பிரிட்டன் நாடாளுமன்றம்மீது 14 தடவைகள் குண்டு வீசப்பட்டன. ஆனால் நாடாளுமன்ற அமர்வு நிறுத்தப்படவில்லை. ஏனெனில் நெருக்கடியான சூழ்நிலையில் சபை கட்டாயம் கூட்டப்படவேண்டும். ஆனால் இலங்கையில் தற்போது வழமைக்கு மாறாக நடக்கின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, ஜனாதிபதியால் நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சுதந்திரத்துக்கு பிறகு நாடு பெரும் நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது. கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நாடாளுமன்றம் தொடர்ச்சியாக கூட வேண்டும். நாடாளுமன்ற அமர்வு நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசமைப்பின் பிரகாரம் இதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அதனை பயன்படுத்தியமை தவறு.
பிரிட்டன் நாடாளுமன்ற நடைமுறையே இங்கு அமுலில் உள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றம் 800 வருடங்கள் பழமையானது. இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டன் நாடாளுமன்றம்மீது 14 தடவைகள் குண்டுபோடப்பட்டன. அப்போது அருகிலுள்ள இடத்துக்கு செங்கோலை கொண்டுசென்று, சபை அமர்வை சபாநாயகர் நடத்தினார். நாடாளுமன்றம் மூடப்படவில்லை. ஏனெனில் நெருக்கடியான சூழ்நிலையில் தீர்வை தேட கட்டாயம் கூட வேண்டும்.
இங்கு பிரச்சினைகளுக்கு அரசிடம் தீர்வு இல்லை. அதேபோல தெரிவுக்குழுக்களின் நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டும். இவற்றுக்காகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.”- என்றார்.










