’20’மீதான விவாதம் இன்று ஆரம்பம் – ஆளுங் கூட்டணிக்குள் குழப்பம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள மேலும் ஒரு சரத்தால் (இரட்டைக்குடியுரிமை விவகாரம்) ஆளுங்கட்சிக்குள் குழப்பநிலை நீடிக்கின்றது. இது தொடர்பில் இன்றைய (21) தினமும் முக்கியத்துவமிக்க சந்திப்புகள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளன.

அமைச்சரவை எண்ணிக்கை, ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கால எல்லை, கண்காய்வுச் சட்டமூலம், அவசர சட்டமூலத்தை கொண்டுவருவதல் உள்ளிட்ட 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் முக்கியமான சில விடயங்களை திருத்துவதற்கு – நீக்குவதற்கு அரசாங்கத்துக்குள் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றம் வரமுடியும் என்ற ஏற்பாட்டை நீக்குவது தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

குறித்த ஏற்பாடு நீக்கப்படவேண்டும் என விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, சிங்கள தேசியவாத அமைப்புகள் மற்றும் பௌத்த பீடங்கள் வலியுறுத்தியுள்ளன. அத்துடன், மேலும் சில பங்காளிக்கட்சிகளும் அழுத்தம் கொடுத்துவருகின்றன.

எனினும், அரசாங்கத்தால் 20 தொடர்பில் இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றம்வர முடியும் என்ற ஏற்பாட்டை நீக்குவது தொடர்பில் எந்தவொரு ஏற்பாடும் இல்லை. எனவே, அந்த ஏற்பாட்டை அரசாங்கம் நீக்காது என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதனால் இறுதி நேரத்தில் ஆளுங்கூட்டணிக்குள் குழப்பநிலை உருவாகியுள்ளது. அந்த ஏற்பாடு நீக்கப்படவேண்டும் என்பதில் விமல் அணி குறியாக இருக்கின்றது என தெரியவருகின்றது.

இரண்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின்பிரகாரம் தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதம் இன்று முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. இரவு 7.30 மணிவரை விவாதம் தொடரும். மறுநாளும் (22) முற்பகல் 10 மணி முதல் விவாதம் நடைபெற்று இரவு 7.30 இற்கு திருத்தங்கள் செய்யப்பட்டு சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

Related Articles

Latest Articles