அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் இன்று (19) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றிரவு (18) விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமரின் வதிவிடத்தில் நடைபெற்றது.
இதன்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், 20 இல் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், ரிஷாட் பதியுதீன் தரப்பின் ஆதரவுஇன்றி ’20’ ஐ நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் அரசாங்கத்திடம் இருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரிஷாட் தரப்பின் ஆதரவை பெறவேக்கூடாது என பங்காளிக்கட்சியொன்றின் தலைவர் கருத்து முன்வைத்த வேலையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும், அதன்பின்னர் ஆளுங்கட்சி எம்.பிக்கள் கூட்டமும் நடைபெறும்.
இக்கூட்டங்களின்போது எடுக்கப்படும் முடிவுகளின் பிரகாரம் 20 தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வைத்து அறிவிக்கப்படும்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்மூலத்துக்கு பௌத்த பிக்குகளும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் மேலும் சில திருத்தங்களை அரசாங்கம் செய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.










