20 ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள முக்கிய அம்சங்கள்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று ஓராண்டு முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்கள் முடிவடைந்த பின்னரே ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியும் என்ற நிலை காணப்பட்டது. 19 வருவதற்கு முன்னர் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.தற்போது அது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

✍️அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் இருக்கவேண்டும் என்ற வரையறை நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமக்கு தேவையான விதத்தில் அமைச்சர்களை நியமிப்பதற்கான வாய்ப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு கிட்டும்.

அதுமட்டுமல்ல பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவி நீக்குவதற்கும்,எந்தவொரு அமைச்சையும் தனக்குகீழ் கொண்டுவருவதற்கான அதிகாரமும் ஜனாதிபதியின் கைகளுக்குள் சென்றடையும். 19 அமுலுக்கு வருவதற்கு முன்னரும் இதே நிலைமை காணப்பட்டது.

✍️இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடமுடியாது, பாராளுமன்றம் வரவும் முடியாது என்ற நடைமுறையும் 20 ஊடாக நீக்கப்படவுள்ளது.

✍️ உயர் பதவிகளுக்கான நியமனங்களை வழங்கும் அரசியலமைப்பு பேரவை நீக்கப்பட்டு, பாராளுமன்ற பேரவை என்ற விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும், மூன்று சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், பாராளுமன்ற பேரவையில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது. உயர்நியமனங்களை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது.

பாராளுமன்ற பேரவையில் 5 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கலாம்.

1.பிரதம அமைச்சர்
2.சபாநாயகர்
3.எதிர்க்கட்சித் தலைவர்
4.பிரதமரின் பிரதிநிதி
5.எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி

✍️ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை 35 இலிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

✍️ஜனாதிபதியின் பதவிகாலம் 5 ஆண்டு, இரண்டு தடவைகள் மாத்திரமே அந்த பதவியை வகிக்கலாம் என்ற 19 இன் ஏற்பாடு 20ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

✍️இரண்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் நீக்கப்பட்டுள்ளன.( கணக்காய்வு சேவை ஆணைக்குழு, தேசிய பெறுமை ஆணைக்குழு)
தேர்தல் ஆணைக்குழு உட்பட 19 இன் பிரகாரம் உருவாக்கப்பட்ட ஏனையவை அதேபோன்று தொடரும்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. தலைவரையும் அவரே நியமிக்கலாம்.

முப்படை தளபதிகள், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரை ஜனாதிபதியே நியமிப்பார்.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

சமூககருத்தாடலுக்கான இரு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும். ஏதேனும் சர்ச்சைகள் இருப்பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அதன்பின்னரே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போதுகூட தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். எனவே, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ’20’ இறுதிப்படுத்தப்பட்டது அல்ல.

திருத்தங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
தேசிய கீதம், தேசியக்கொடி, ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை உட்பட அரசியலமைப்பிலுள்ள 12 விடயங்கள் சார்ந்தவற்றுடன் தொடர்புடையவற்றை மாற்றுவதாக இருந்தாலே சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும்.

எனவே, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் 20ஐ நிறைவேற்றலாம். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டிய தேவை எழவில்லை என சட்டமா அதிபரும் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறிய பின்னர் அதில் சபாநாயகர் கையொப்பம் இடும் தினத்தில் இருந்து சட்டம் நடைமுறைக்கு வரும்.

ஆர்.சனத்

www.documents.gov 

Related Articles

Latest Articles