பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளுக்காக முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200 இற்கு அதிகமான புலமைப்பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், துணைமருத்துவம், நவநாகரீக வடிவமைப்பு, மற்றும் சட்டத்துறை சார்ந்த கற்கைகள் தவிர்ந்த பல்வேறு துறைகளில் கல்வியினைக் கற்பதற்காக இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
இலங்கை பிரஜைகளுக்கென பிரத்தியேகமாக வழங்கப்படும் இப்புலமைப்பரிசில்கள் 2024-2025 கல்வி ஆண்டுக்கானவையாகும்.
இந்த திட்டத்தின் கீழ் பின்வரும் கற்கைநெறிகளுக்காக புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம், வர்த்தகம், பொருளியல், வணிகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட அனைத்து பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு முதுமாணி (Undergraduate/Post Graduate & PhD ) கற்கைநெறிகளை இந்தத் திட்டம் உள்ளடக்குகின்றது.
மௌலானா ஆசாத் புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகியதுறைகளில் முதுமாணி பட்டப்படிப்புகள்.
ராஜிவ் காந்தி புலமைப் பரிசில் திட்டம்:
Bachelor of Engineering அல்லது Bachelor of Technology பட்டப் படிப்புகளுக்கு வழிசமைக்கும் ‘தகவல் தொழில்நுட்பத் துறைகளிலான பட்டப்படிப்புக் கற்கைநெறிகள்.
அனைத்துப் புலமைப் பரிசில்களும் கற்கை நெறிகளின் முழுமையான காலத்திற்கும் கல்விக் கட்டணம், மாதாந்த அடிப்படைச் சலுகைக் கட்டணம், மற்றும் புத்தகங்கள் ரூ காகிதாதிகளுக்கான வருடாந்த கொடுப்பனவு என்பவற்றை உள்ளடக்குகின்றது.
ஏனைய பல்வேறு அனுகூலங்களுடன் இந்தியாவிலுள்ள அண்மித்த பயணச் சேரிடங்களுக்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலாவுக்கான வருடாந்தக் கொடுப்பனவு என்பனவும் வழங்கப்படும். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு குறித்த பல்கலைக் கழக வளாகத்தினுள் விடுதி வசதிகளும் வழங்கப்படும்.
இந்தப் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக தகுதி வாய்ந்த இலங்கைப் பிரஜைகளை இந்திய அரசாங்கம் தெரிவு செய்கிறது. தகுதிவாய்ந்தவர்களை தெரிவுசெய்யும் செயற்பாடுகள் இலங்கை கல்வி அமைச்சுடனான கலந்தாலோசனையில் மேற்கொள்ளப்படும்.
இவ்விடயம் தொடர்பாக தேவையான தகவல்களை கல்வி அமைச்சின் www.mohe.gov.lk எனும் இணையத்தள முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். இந்த கற்கை நெறிகளுக்கான தகைமை மற்றும் தெரிவு செய்தல் நடைமுறை தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் இலங்கை கல்வி அமைச்சு அல்லது கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் (eduwing.colombo@mea.gov.in) ஆகியவற்றை அணுகி தகவல்களைப் பெறமுடியும்.










