இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரும், சுதந்திரமடைந்த பின்னரும் சொற்ப அளவு சம்பளத்தைக்கூட போராடிபெற வேண்டிய அவல நிலையே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் நீடிக்கின்றது.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வைக்கோரி வந்தாலும் அந்த கோரிக்கை இன்றளவிலும் நிறைவேற்றப்படவில்லை அல்லது கைகூடவில்லை.
இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச வேதனமாக 2 ஆயிரத்து 321 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானப்பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வுமூலம் தெரியவந்தது.
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியரான எஸ்.விஜயசந்திரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே மேற்படி பரிந்தரை முன்வைக்கப்பட்டது.
அதேபோல மேலும் சில சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
எனினும், இவற்றை கருத்திற்கொள்ளாது, தொழிலாளர்களிடம் ஆலோசனை பெறாது நாளொன்றுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எட்டப்பட்டது. கொட்டகலையில் மே முதலாம் திகதி நடைபெற்ற கூட்டத்தின்போது இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி விடுத்தார். இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது.
எனினும், குறித்த சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் போர்க்கொடி தூக்கின. தொழில் அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடை உத்தரவையும்கோரின. எனினும், இடைக்கால தடை உத்தரவை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனால் தமக்கு சம்பள உயர்வு கிடைக்கப்போகின்றது என்ற மகிழ்ச்சியில் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களை தூண்டிவிட்டு பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து தொழிற்சங்கங்களும் தமது அரசியல் தேவையை பூர்த்தி செய்ய முற்பட்டது. இறுதியில் பெருந்தோட்ட நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தை நாடின. இடைக்கால தடை உத்தரவையும் பெற்றுள்ளன.
மறுபுறத்தில் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். காலையில் ஒரு மணிநேரம் போராடிவிட்டே தொழிலுக்கு செல்கின்றனர்.
வழமைபோல நஷ்டம் என்ற பல்லவியையே பெருந்தோட்ட நிறுவனங்கள் பாடுகின்றன. ஆனால் பெருந்தோட்டக் கம்பனிகள் எவ்வளவு இலாபம் உழைக்கின்றன என்ற தகவலை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தி இருந்தார்.
இது தேர்தல் காலம் என்பதால் மலையக பகுதிகளில் உள்ள வாக்குகளை குறிவைத்து தொழிலாளர்களுக்கு எப்படியேனும் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் போராடிவருகின்றது. சம்பள உயர்வை வழங்க மறுக்கும் நிறுவனங்களை காணி குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.
இலங்கையில் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு நிர்ணயிக்கும், தனியார் துறையினருக்கான சம்பளத்தை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும், சம்பள நிர்ணய சபை பரிந்துரைகளை முன்வைக்கும். ஆனால் 90 காலப்பகுதி முதல் கூட்டு ஒப்பந்தம் ஊடாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுவந்தது.
பெருந்தோட்ட நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் இணைந்து சம்பளத்தை நிர்ணயித்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும். கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் இரு வருடங்களாகும். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அப்போதைய பொருளாதார சூழ்நிலைமைக்கேற்ப சம்பள உயர்வை வழங்கும் நோக்கிலேயே அந்த கால எல்லை நிர்ணயிக்கப்பட்டது.
கூட்டு ஒப்பந்தமுறைமை சிறந்தது என்றபோதிலும் அதனை தொழிலாளர்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதற்கு அதில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் முற்படவில்லை. அதனால்தான் அது அடிமை சாசனமாகக் கருதப்பட்டது.
2013 ஆம் ஆண்டுவரை கூட்டு ஒப்பந்த முறைமை தொடர்ந்தது. 2015 இல் அது காலாவதியான பின்னர் இன்றுவரை கூட்டு ஒப்பந்தம் அமுலில் இல்லை. இரு தரப்புகளும் வெளியேறிவிட்டன. இதனால்தான் தற்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் சம்பள நிர்ணயசபை தலையிட்டுள்ளது.
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பது பற்றியும், அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது பற்றியும் தற்போது அதிகம் பேசப்படுகின்றது. அப்படியாயின் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த நாள்கூலி முறைமை இல்லாதொழிக்கப்பட்டு நிலையானதொரு தீர்வு உருவாக்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகள் பற்றி குழுக்கள் அமைத்து ஆராயப்பட வேண்டும்.
பெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்துவழங்கி, சிறந்த அவுட்கிரோ முறைமையை அறிமுகப்படுத்தலாம். ஒரே இரவில் இதனை செய்துவிட முடியாது. குறுகிய காலம், மத்திய காலம், நீண்டகாலம் என்ற அடிப்படையில் திட்டத்தை செயற்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்தலாம். அவ்வாறு இல்லையேல் பேரவலம் தொடரவே செய்யும்.