நான்கு முக்கிய துறைகளை உள்ளடக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் ஒரே தடவையில் அரசியல் நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

நான்கு முக்கிய துறைகளான இளைஞர்அமைப்புகள், மகளிர் அமைப்புகள், உள்ளுராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திப்பது மற்றும் கீழ்மட்ட மக்களுக்கான வேலைத் திட்டம் ஆகியன அதில் உள்ளடங்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய கட்சியின் கொள்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அதனையடுத்து அடுத்தவாரம் முதல் முழுமையான அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் பிரதித் தலைவரான ருவன் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார ஆகியோரின் தலைமையில் எதிர்வரும் புதிய வருடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
