ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் ரணில் விக்கிரமசிங்க 2023 வரை நீடிப்பார். அதற்கு முன்னர் மாற்றம் வேண்டுமெனில் கட்சி சம்மேளனத்தைக்கூட்டி கட்சி யாப்பின் பிரகாரமே மாற்றங்கள் செய்யப்படவேண்டும் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐ.தே.கவின் தலைமைப்பதவியை ஏற்பதற்கு தயாரென நவீன் திஸாநாயக்க விடுத்திருந்த அறிவிப்பு தொடர்பில் வஜீவ அபேவர்தன கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தார். வஜிரவின் இந்த அணுகுமுறை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நவீன் திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
நுவரெலியாவில் 27.07.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” வஜீர அபேவர்தன எனக்கு எதிராக கடுமையான முறையில் விமர்சனங்கள் எதனையும் முன்வைக்கவில்லை. தனது கருத்தையே அவர் வெளியிட்டிருந்தார். இவ்வாறு கருத்து வெளியிடும் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது. இதுதான் ஐக்கிய தேசியக்கட்சியிலுள்ள ஜனநாயகப் பண்பாகும்.
அந்தஅடிப்படையிலேயே தலைமைத்துவம் தொடர்பில் நான் கருத்து வெளியிட்டிருந்தேன். அதே உரிமை வஜீர போன்றவர்களுக்கும் இருக்கின்றது.
அத்துடன், பெரும்பான்மையானோரின் விருப்பத்துடன் ஜனநாயகமுறைப்படியே தலைமைத்துவ தேர்வு இடம்பெறவேண்டும் என்ற விடயத்தையும் நான் குறிப்பிட்டிருந்தேன். எனவே, ரணில் விக்கிரமசிங்க விலகும்போது, இரகசிய வாக்கெடுப்புமூலம் தலைவரை தெரிவுசெய்வதே ஏற்புடைய நடவடிக்கையாக அமையும். இதன்போது வஜீரவாலும் போட்டியிடமுடியும்.
நுவரெலியா மாவட்டத்தில் நாம் சிறந்த மட்டத்தில் இருக்கின்றோம். இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவது உறுதி. அந்த எண்ணிக்கையை மூன்றாக அதிகரித்துக்கொள்வதற்கே பாடுபடுகின்றோம். நாடு தழுவிய ரீதியிலும் முன்னர் இருந்ததைவிடவும் பலமாக இருக்கின்றோம்.
2023 ஆம் ஆண்டுவரை தலைமைப்பதவியில் இருப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2019 இல்கூடிய எமது கட்சி சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது. அதில் மாற்றம் செய்யவேண்டுமெனில் சம்மேளனத்தை மீண்டும் கூட்டவேண்டும். சஜித்தையும் பொறுமைகாக்குமாறு கோரினோம். ஆனால், அவர் சூழ்ச்சியில் சிக்கிவிட்டார். ” – என்றார்.
க.கிசாந்தன்