ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு முக்கிய பங்கு வகித்த தரப்புகளில் ‘வியத்மக’ என்ற சிவில் அமைப்பும் ஒன்றாகும்.
அரசியல் களம் புகுவதற்கு முன்னர் மேற்படி குழுவின் ஊடாகவே கோட்டாபய ராஜபக்ச பரப்புரைகளை முன்னெடுத்தார். பௌத்த தேரர்களும், புத்திஜீவிகளும், துறைசார் நிபுணர்களும் இக்குழுவில் இடம்பெற்றிருந்ததால் சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றிருந்ததுடன், இலகுவில் பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடியதாகவும் இருந்தது.
அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர்களான சன்ன ஜயசுமன, பேராசிரியர் நாலக கோட்டேகொட, சீதா அரம்பேபொல ஆகியோர்கூட வியத்மக அமைப்பின் அங்கத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் வியத்மக குழு செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சஜித் பிரேமதாசவும், வியத்மக பாணியில் புத்திஜீவிகள் குழுவொன்றை அமைத்துள்ளார். முக்கிய பிரமுகர்கள் இதில் இடம்பிடிக்கவுள்ளனர். முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்கவும் இக்குழுவில் அங்கம் வகிக்கவுள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் கூட்டணியொன்றும் அமையவுள்ளது. அதற்கான யாப்பு உருவாக்கப்பட்ட பின்னர் கூட்டணி அமையும். சம்பிக்க ரணவக்க தலைமையில் சிங்கள, பௌத்த வாக்குகளை திரட்டுவதற்கான வியூகமும் வகுக்கப்பட்டுவருகின்றது.
2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கே சஜித் பிரேமதாச தற்போதிருந்தே வியூகம் வகுத்துவருகின்றார் என அரசியல் களத்தில் பேசப்படுகின்றது.