காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
ஐரோப்பாவின் காலநிலை கணிப்பு அமைப்பான கோப்பர்னிகஸ், 2024 ஆன் ஆண்டு தான் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டு.
மேலும், இந்த ஆண்டு தான் முதன்முறையாக தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிக வெப்ப நிலையைக் பதிவாகியுள்ளது.
இதனால் இந்த ஆண்டு உலகளவில் 41 நாட்கள் அதிக வெப்பமான நாளாக அமைந்தன. இதுவே கடந்த ஆண்டு 26 நாட்களாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
வேர்ல்டு வெதர் ஆட்ரிப்யூஷன் (World Weather Attribution (WWA) மற்றும் க்ளைமேட் சென்ட்ரல் ( Climate Central ) மேற்கொண்ட ஆய்வில், காலநிலை மாற்றத்தால் உலகளவில் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. சிறு தீவுகள், வளரும் நாடுகள் இந்த கூடுதல் வெப்ப நாட்களால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், அப்பகுதிகளில் கூடுதலாக 130 வெப்பமான நாட்கள் பதிவாகியுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டு 219 தீவிர காலநிலை நிகழ்வுகள் நடந்துள்ளன. தீவிர காலநிலை நிகழ்வுகளால் உலகம் முழுவதும் 3700 பேர் உயிரிழந்துள்ளனர். 26 மோசமான நிகழ்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக சூடான், நைஜீரியா, நைஜர், கேமரூன், சாட் போன்ற நாடுகளில் வெள்ளத்தால் உயிரிழப்புகள் அதிகமாக பதிவாகிள்ளது. தீவிர காலநிலை தாக்கம் தொடர்ந்தால் இந்தப் பகுதிகள் மேலும் இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களை சந்திக்கக் கூடும். 2040-ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை கடக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைப் பற்றி வேர்ல்டு வெதர் ஆட்ரிப்யூஷன் (WWA) அமைப்பின் முன்னோடி, லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஃப்ரெட்ரிக் ஆட்டோ கூறுகையில், “நாம் புதிய அபாயகரமான காலகட்டத்தில் வாழ்கிறோம். நிலைமை இன்னும் மோசமாகாமல் தடுக்க வேண்டும். படிம எரிபொருள்கள் எரிப்பதை நிறுத்த வேண்டும். 2025 ஆம் ஆண்டுக்கான மிக முக்கியமான உறுதிமொழியாக படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து மாற்று எரிபொருள் பயன்பாட்டை நோக்கி நகர்தல் இருக்க வேண்டும். அப்போதுதான், உலகை பாதுகாப்பான, நிலையான வசிப்பிடமாக மாற்ற வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.
பாரிஸ் உடன்படிக்கை என்றால் என்ன? கடந்த 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் கூடிய ஐ.நா. காலநிலை மாநாட்டில் (COP21) ‘பாரிஸ் உடன்படிக்கை’ (Paris Agreement) உலகின் 195 நாடுகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டது.
நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட படிம எரிபொருட்களை மிதமிஞ்சி பயன்படுத்தியதாலும், காடுகளை அழித்ததாலும் வளிமண்டலத்தில் மாசுக்காற்றின் அடர்த்தி அதிகமாகி, பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது. இதனால் பெருவெள்ளம், அதிவேக சூறாவளி, பெரும் வறட்சி, நோய்கள் அதிகரிப்பு, வேளாண்மை பாதிப்பு, கடல்வள அழிவு என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
14 டிகிரி செல்சியசாக இருந்த புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாகத்தான் இவ்வளவு பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், அதை 2 டிகிரி செல்சியஸ், அதாவது 16 டிகிரி என்ற அளவுக்கு செல்லவிடாமல் குறைக்க உறுதி ஏற்கப்பட்டிருக்கிறது. முடிந்தால் இதை 1.5 டிகிரி செல்சியசுக்குள், அதாவது 15.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முயற்சி செய்வது என்றும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 2024-ல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட உயர்ந்து 1.58 டிகிரி செல்சியஸாக பதிவானது.
இந்நிலையில் தான் காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.