நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சபாநாயகர் மகிழ்ச்சி

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், அது தொடர்பான விவாதம் நடைபெறும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றச் செயலாளரிடம் கையளிக்கப்படும். எனவே, இந்த விடயத்தில் நான் எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை.
எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். அதற்காக, விவாதம் நடைபெறும் நாளை விரல்களை எண்ணியபடி ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்” என்றார்.
…………
திறந்தவெளிச் சிறையாக மாறியுள்ளது இலங்கை

“பாதுகாப்புத் துறையினருக்கு இருந்த கைது செய்யும் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கும் ஏனைய சில நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை ஒரு வருடம் வரை தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரமும் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டு நாடே ஒரு வெளிப்படையான சிறைச்சாலையாக மாறியுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே இதனைக் கூறிய அவர், மேலும் குறிப்பிடுகையில்:-
“அரசு ஜனநாயக உரிமைகளை முடக்கி, நாட்டை இராணுவமயமாக்கல் நோக்கியும் பொருளாதார நெருக்கடியை நோக்கியும் தள்ளி வருகின்றது. குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டமூலங்கள் மூலம் நாடு ஒரு இராணுவ இராச்சியமாக மாற்றப்பட்டு வருகின்றது.
பாதுகாப்புத் துறையினருக்கு இருந்த கைது செய்யும் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கும் ஏனைய சில நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை ஒரு வருடம் வரை தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரமும் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டு நாடே ஒரு வெளிப்படையான சிறைச்சாலையாக மாறியுள்ளது.
கடந்த காலங்களில் வீதிகளை மறித்துத் தொடர்ச்சியாகப் போராடியவர்களே இன்று மக்களின் போராட்ட உரிமைகளை நசுக்கி வருகின்றனர். சர்வதேச மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் கேள்விகளையும் அரசு பொருட்படுத்தவில்லை.
தனியார் துறை விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து அரசும் எரிபொருள் விலையை அதிகரித்து வருகின்றது. கோதுமை மா மற்றும் பாண் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் விலையேற்றத்தின்போது வரியைக் குறைக்க வேண்டும் என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு 12 தடவைகளுக்கும் மேலாக வரிகளை அதிகரித்து மக்கள் மீதான சுமையை உயர்த்தியுள்ளனர்.
சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடிகள் குறித்து ஆராய விசேட நாடாளுமன்றக் குழுவொன்றைக் கோரிய போதிலும் சபாநாயகர் அதற்கு அனுமதியளிக்கவில்லை. எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அரசின் கைப்பாவையாகச் செயற்படும் சபாநாயகரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” – என்றார்.
……………
பதுளை மாவட்டத்தில் கனமழை

நாட்டில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமை காரணமாக பதுளை மாவட்டத்தில் நேற்று (02) மாலை தொடக்கம் பரவலாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பதுளை நகரை அண்மித்த பகுதிகளில் கொட்டிக் தீர்த்த கனமழை காரணமாக பதுளுஓயா ஆற்றின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்ததால் பதுளுஓயா ஆற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அவசர வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எல்ல- வெல்லவாய வீதியிலும், இராவண எல்ல வீதியிலும், பதுளை- கொழும்பு வீதியின் பெரகல ஐஸ் பீலிக்கு அருகிலும் வீதிக்கு குறுக்காக பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக அப்பாதைகளின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு இருந்ததுடன் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மாலை தொடக்கம் அதிகாலை வரை தொடர்ந்த கனமழை காரணமாக ஆறுகள், நீரோடைகள் என்பவற்றில் நீர் பெருக்கெடுத்துள்ளது. இன்று காலை வேளையிலும் மாவட்டத்தில் மப்பும் மந்தாரமான வானிலை நிலவி வருகிறது. மழை தொடர்ந்தால் மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பசறை நிருபர்
………….
ஊவா வெல்லஸ்ஸ பல்கலை துணைவேந்தர் கடமையேற்பு

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிட்டவல நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனத்துக்கு அமைய, அவர் நேற்று (2) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் சிறப்புப் பட்டம் மற்றும் முதுதத்துவமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர், சுவீடனின் சால்மர்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொருட்கள் விஞ்ஞானத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர், பிரயோக விஞ்ஞான பீடாதிபதி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜெயசேகர, கிழக்கு மாகாண ஆளுநரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான ஜயந்தலால் ரத்னசேகர பல்கலைக்கழகத்தின் கல்விசார் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
………….
2029 ஜனாதிபதி தேர்தல் சமர்: ரணில், சஜித் அணிகள் சங்கமம்

2029 ஜனாதிபதி தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்தே எதிர்கொள்ளும் என்று ஐ.ம.சவின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தனிக்கட்சியாக மாறாது எனவும், புரிந்துணர்வு அடிப்படையில் கூட்டணியாகவே செயல்படும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியவை வருமாறு,
” ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் ஆதரவாளர்கள் கிராமிய மட்டத்தில் ஒன்றிணைந்துவிட்டது. அடுத்த தேர்தலின்போது இரு கட்சிகளும் ஒன்றிணைந்து – கூட்டணியாகவே செயல்படும்.
ஒன்றிணைவதால் மட்டும் வெற்றிபெற முடியும் என கருதக்கூடாது என்ற ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து சரியானது. நவீன யுகத்துக்கேற்ப மாற்றம் மற்றும் இளைஞர் சக்திகளையும் இணைத்துக்கொண்டே பயணிக்க வேண்டும். இதனையே அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துடன் நாம் உடன்படுகின்றோம்.
தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். அதற்காக ஒன்றிணைவோம். 2029 இல் இரு கட்சிகளாலும் பொது மேடைக்கு வரமுடியும் என உறுதியாக நம்புகின்றோம்.”- என்றார் திஸ்ஸ அத்தநாயக்க.
……….
நம்பிக்கையில்லாப் பிரேரணை: நாடாளுமன்றில் கடும் அமளி

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட பல சிறப்புரிமை மீறல் தொடர்பான விடயங்களை உடனடியாக சபையில் எழுப்ப அனுமதி வழங்க பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மறுத்ததைத் தொடர்ந்து, இன்று (03) நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர், இன்று காலை 9 மணிக்குப் பின்னர் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த சிறப்புரிமை மீறல் தொடர்பான ஆவணங்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், அவற்றை இதுவரை முழுமையாகப் பரிசீலிக்காததால், உடனடியாகச் சபையில் எழுப்ப அனுமதி வழங்க முடியாது எனவும் அவர் விளக்கமளித்தார்.
இதன்போது, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மறுப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எதிர்ப்பை வெளியிட்டார். இந்தத் தீர்மானம் நாடாளுமன்ற சிறப்புரிமைகளையும் ஜனநாயகக் கோட்பாடுகளையும் மீறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 44 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
குறித்த பிரேரணை ஒக்டோபர் 12ஆம் திகதி நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் தீர்மானத்தைத் தொடர்ந்து அது நிராகரிக்கப்பட்டதாகவும், இதனால் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விவாதிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை சபாநாயகரின் நடுநிலைமை, நாடாளுமன்றத்தின் சுதந்திரம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாடாளுமன்றத்துக்குள் கருத்துச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் விவாத உரிமை ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசியலமைப்பின்படி சபாநாயகர் நடுநிலையுடன் செயற்பட வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளதுடன், ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற உரிமைகளைச் சமமாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மறுத்தமை நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலாக அமைகிறதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதி சபாநாயகரின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எதிர்ப்புகளுக்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, சிறப்புரிமை மீறல் தொடர்பான விடயங்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்று சபை அமர்வின்போதே அதற்கான பதில் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், அரச தரப்பு தனது திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
………….
பூநகரியில் பொலிஸ் வீதித் தடையை மீறித் தப்பியோடிய சந்தேகநபர்கள்: 14 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் பொலிஸாரின் வீதித் தடையை மீறித் தப்பியோடிய சந்தேகநபர்கள் கைவிட்டுச் சென்ற பொதியிலிருந்து 14 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் நேற்று முன்தினம் (02) இரவு முன்னெடுக்கப்பட்ட வீதித் தடுப்பு நடவடிக்கையின்போதே இந்தப் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, கடமையில் இருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிடுமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
எனினும், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் நிறுத்தாமல் தப்பிச் சென்றதுடன், அவர்களில் ஒருவர் பொதியொன்றைக் கைவிட்டுச் சென்றுள்ளார்.
அந்தப் பொதியைச் சோதனையிட்டபோது, 14 சிறிய பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13.340 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1.62 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தப்பியோடிய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
…………..
விசா இன்றி தங்கிருந்த 21 வெளிநாட்டவர்கள் கொழும்பில் கைது

இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டில் 21 வெளிநாட்டவர்கள் கொழும்பு, மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, மருதானை தொழில்நுட்பச் சந்திக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் நேற்று (02) இரவு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 12 சீனப் பிரஜைகள், ஆறு பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் மூன்று இந்தியப் பிரஜைகள் உள்ளடங்குகின்றனர். சீனப் பிரஜைகளில் இரு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கட்டடத்தில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
…………..
திருகோணமலை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னணி என்ன?

திருகோணமலை – கப்பல்துறைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு ஓட்டோ ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கப்பல்துறைப் பகுதியில் நேற்று இரவு 9.15 மணியளவில் பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோ ஒன்றை இலக்குவைத்து, ரி – 56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் திருகோணமலை, ஆண்டான்குளம் – பேதிஸ்புர பகுதியைச் சேர்ந்த ரத்ன விபுசன குலதுங்க ஆராய்ச்சிலாகே கயான் மனுசங்க (வயது 39) எனும் குடும்பஸ்தரான கடற்படைச் சிப்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அத்துடன், ஓட்டோவில் பயணித்த 28 மற்றும் 38 வயதுடைய இருவர் பலத்த காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், போதைப்பொருள் விவகாரம் தொடர்பான தகராறே இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிரதான காரணம் எனக் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
…………………….
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, ”பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் பால்மாவின் விலையும் அதிகரித்துள்ளதுடன், சில இறக்குமதிப் பொருட்களின் விலைகளிலும் சிறிய உயர்வு ஏற்பட்டுள்ளது. சந்தையில் விலை நிலைத்தன்மையைப் பேணுவதற்காக விவசாயிகளிடமிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்து சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதேபோன்று உணவுப் பாதுகாப்புக் குழு பாராளுமன்றத்தில் கூட்டப்பட்டு சதொச உள்ளிட்ட நாடளாவிய சந்தைகள் ஊடாக நுகர்வோருக்குத் தேவையான பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சில நாடுகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதால் இலங்கையிலும் அதன் தாக்கம் உணரப்படுகிறது. எனினும், பண்டிகைக் காலத்தில் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதிப்படுத்த லங்கா சலுசல, லங்கா சதொச, கூட்டுறவுச் சங்கங்கள், புறக்கோட்டை இறக்குமதியாளர் சங்கம் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.










