நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏன் 21ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் அதிக அவசரம் காட்டுகிறார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் கேள்வி
எழுப்பியுள்ளனர்.
இதேவேளை 21ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படாவிட்டால், பிரதமர் பதவியிலிருந்து தான் விலகப்போவதாக ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்துள்ளாராம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த வாரம் இடம்பெற்றது.
இதன்போது, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதிலாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏன் அரசியல் நிலைமைகள் தொடர்பில் அதிக கவனம்செலுத்துகிறார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளதோடு, பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணில் என்ன செய்திருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நிதி அமைச்சராக புதியவர் ஒருவரை நியமிக்கும் வரையில், நிதி அமைச்சை ஜனாதிபதி வசம் வைத்திருக்காது, எதற்காக ரணிலுக்கு நிதி அமைச்சு வழங்கப்பட்டதெனவும் ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுனவினர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இலங்கைக்கு நிதி உதவியைப்பெறுவதற்காக உலக நாடுகளுடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடி வருவதாலேயே ரணிலுக்கு நிதி அமைச்சு
வழங்கப்பட்டுள்ளதாகவும், எவ்வாறாயினும் நிதி அமைச்சு, மத்திய வங்கியின் செயற்பாடுகளைத் தான் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது பதிலளித்துள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து நந்தலால் வீரசிங்கவை நீக்கிவிட்டு முன்னாள் ஆளுநர் குமாரசாமியை அப்பதவியில் மீண்டும் நியமிப்பதற்கான அழுத்தங்களை ரணில் வழங்கி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் நந்தலால் வீரசிங்கவை தொடர்ந்து வைத்திருக்க ஜனாதிபதி விரும்புகிறார்.
இதனாலேயே மத்திய வங்கியின் செயற்பாடுகளைப் பாராட்டி ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிது.
