21 ஐ இறுதிப்படுத்துவது குறித்து இன்றும் முக்கிய பேச்சு!

அரசியலமைப்பிற்கான உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை இறுதிப்படுத்துவதற்கான பேச்சுகள் நேற்று இடம்பெற்ற நிலையில், இன்றைய தினமும் முக்கிய சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

இதன்படி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பேச்சு நடத்தவுள்ளார். பிரதம அமைச்சரின் செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாசவும் பங்கேற்கவுள்ளார்.

உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான தமது கட்சிகளின் முன்மொழிவுகள் மற்றும் திருத்த யோசனைகளை இதன்போது கட்சி பிரமுகர்கள், பிரதமரிடம் கையளிக்கவுள்ளனர்.

சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடனும் இது சம்பந்தமாக பேச்சுகள் இடம்பெறவுள்ளன.

அதன்பின்னர் உத்தேச அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தப்பட்டு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும். அது வர்த்தமானியில் வெளியான பின்னர், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

அதேவேளை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பிரதமருக்கும், விமல், உதயகம்மன்பில, வாசு உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது.

Related Articles

Latest Articles