21/4 தாக்குதல் – எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கு கிடையாது!

21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் எந்தவொரு நபரையும் பாதுகாக்கவேண்டிய தேவை அரசுக்கு கிடையாது. வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் சட்டமா அதிபரே தீர்மானம் எடுப்பார் – என்று அமைச்சரும், சட்டத்துறை நிபுணருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று தெரிவித்தார்.

21/4 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு எதிராக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நபரொருவர் தொடர்பில் சாட்சியங்களின் அடிப்படையில்தான் வழக்கு தாக்கல் செய்யப்படும். வழக்கு தொடுப்பதா இல்லையா என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களமே தீர்மானம் எடுக்கும். இதுதான் நெறிமுறை. கடந்த ஆட்சியின்போது இந்த கோட்பாடு மீறப்பட்டது. அலரிமாளிக்கையில் இருந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதனால்தான் குழப்பமான நிலைகூட உருவானது.

அரசியல் காரணங்களின் அடிப்படையில் அல்ல சாட்சியங்களின் அடிப்படையிலேயே சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும். எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. அதேபோல எவரையும் பிரச்சினைகளுக்குள் சிக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் எமக்கு இல்லை.

21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் உரிய வகையில் இடம்பெறுகின்றன. கடந்த சில நாட்களில்கூட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles