ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதல்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக நல்லாட்சியின்போது நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தற்போதைய அரசுக்கு திருப்தி இல்லை – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06) ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி., நலின் பெர்ணான்டோவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” 21/4 தாக்குதல் தொடர்பில் எமது அரசால் பரந்தப்பட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கடந்த ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையின்போது வெளிவராத பல தகவல்கள், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைமூலம் வெளிவந்துள்ளன. இதன்படி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்து எமது அரசுக்கு திருப்தி இல்லை.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் 2021 ஜனவரி 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளன. அவ்வாறு நிறைவடைந்த பின்னர் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.” – என்றும் சரத் வீரசேகர கூறினார்.