உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு அதியுச்ச தண்டனையை வழங்குவது மாத்திரமின்றி தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரினதும் சொத்துகளும் அரசுடமையாக்கப்படும். அவ்வாறு அரசுடமையாக்கப்படும் சொத்துகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக இழப்பீடுகளை வழங்குவது தொடர்பிலும் பரிசீலனை செய்யப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அத்துடன், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் விசாரணைஅறிக்கை, அரச புலனாய்வுத்துறையின் அறிக்கை, பொலிஸாரின் அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, வெளிநாட்டு புலனாய்வுத்துறையின் விசாரணை அறிக்கை மற்றும் ஏனைய அறிக்கைகளின் பிரகாரம்தான் நௌப்பர் மௌலவியே பிரதான சூத்திரதாரியென அறிவித்துள்ளேன். இவர் பிரதான சூத்திரதாரி இல்லையென கூறுபவர்கள் உரிய சாட்சியங்கள் இருந்தால் ஒப்படைக்கலாமெனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான இறுதிநாள் விவாதத்தில் பதில் உரையை வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் மிகவும் வினைத்திறன் மிக்க விதத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பயங்கரவாதத் தடுப்பு பிரிவு, சிஐடி மற்றும் பொலிஸாரினால் இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 108 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 75 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள 54 பேரில் 50 பேரை நாட்டுக்கு அழைத்துந்துள்ளோம் என்பதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ள 32 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சட்ட மாஅதிபருக்கு இந்த ஆவணங்களுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் கிடைத்துள்ளதால் 32 பேருக்கும் எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய அவர் இரவு – பகலாக செயற்பட்டு வருகிறார். அதன் காரணமாக வழக்குத் தாக்கல் செய்ய தாமதம் ஏற்படுவதாக ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நீதியானதல்ல. தற்போது இந்த விடயம் சட்ட மாஅதிபர் கையில்தான் உள்ளது.
பிரதான சூத்திரதாரியை மறைக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக தேசியப் பாதுகாப்பை கணக்கில் எடுக்காது செயற்பட்டவர்கள் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருந்தால் தாக்குதல்களை இலகுவாக தடுத்திருக்கலாம்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சஹரானின் குழுவினருக்கோ அல்லது அவரது வலையமைப்புகோ எவ்வித நிதியும் அளிக்கப்படவில்லையென்பதை பொறுப்புடன் கூறுவதுடன் அது குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முழுயான நிதி உதவியை இப்ராஹித் சகோதரர்கள்தான் வழங்கியுள்ளனர். 2014ஆம் ஆண்டுமுதல் தாக்குதல்களுக்கான பின்புலத்தை உருவாக்க 500 இலட்சத்தை வழங்கியுள்ளனர்.
