இலங்கையின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். சட்ட ரீதியாக ஏதேனும் தடங்கள் ஏற்படாதபட்சத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.
அந்தவகையில் எதிர்வரும் செப்டம்பர் 21 அல்லது 28 ஆம் திகதிகளில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் நோக்கிலேயே தேர்தல் ஆணைக்குழு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதி இம்மாத இறுதிக்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விடுத்திருந்தாலும் தேர்தல் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்படுமா அல்லது ஏதேனுமொரு வழியில் ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் இன்னும் நீங்கவில்லை.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணை இன்றியே நிராகரிக்கப்பட்டிருந்தாலும்கூட, ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்குரிய சூழ்ச்சி இன்னும் கைவிடப்படவில்லை என்பதே எதிரணிகளின் கருத்தாக உள்ளது.
தேர்தலை பிற்போடுவதற்குரிய மற்றுமொரு அஸ்திரமே அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல யோசனையாகும் என எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஆறாண்டுகளாக இருந்த ஜனாதிபதியின் பதவிகாலம் அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் 5 வருடங்களாக குறைக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னரே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் 19 இல் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் 21 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ஜனாதிபதிக்குரிய பதவிகாலத்தை அவர் மாற்றவில்லை. அது 5 வருடங்களென தொடர்ந்தது.
எனினும், அரசமைப்பின் 83 ஆம் உறுப்புரையானது, அதன் (ஆ) எனும் பந்தியில் ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட என கூறப்பட்டிருப்பதால், அதற்கு பதிலாக ஐந்து ஆண்டுகள் எனும் சொற்பதத்தை சேர்க்கும் வகையிலேயே 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது. இது அரசமைப்பில் உள்ள வழுவை திருத்தும் நடவடிக்கை மட்டுமே என ஆளுங்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு சில வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதுவும் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறவுள்ள தருணத்தில் இப்படியான நகர்வு முன்னெடுக்கப்படுகின்றமையானது தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சியென எதிரணிகள் அஞ்சுவதை எடுத்த எடுப்பிலேயே அரசியல் பிரசாரம் என நிராகரித்துவிடவும் முடியாது.
மேற்படி அரசமைப்பு திருத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூகத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தேர்தல் முடிவடையும்வரை அதனை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டாம் என தனது அமைச்சு செயலாளருக்கு நீதி அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.
எனினும், தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஜனாதிபதி வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
சட்டமூலமொன்றை எடுத்த எடுப்பிலேயே நிறைவேற்றிவிட முடியாது. அதற்கென நடைமுறைவுள்ளது. வர்த்தமானியில் வெளியானாலும்கூட நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்கென முன்வைக்க வேண்டும், அதன்பின்னர் உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும், உயர்நீதிமன்றம் தனது சட்ட வியாக்கியானத்தை வழங்கிய பின்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
இது அரசமைப்பு திருத்த யோசனை என்பதால் அவசர சட்டமூலமாக கொண்டுவர முடியாது. எனவே, உரிய நடைமுறைகளை பின்பற்றியே வரவேண்டும். அதேபோல அரசமைப்பு சீர்திருத்த யோசனை என்பதால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம்.
எனவே, இதன்பின்னணியில் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய சூழ்ச்சி இருக்குமானால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிட்டாது, தேர்தலை பிற்போட இடமளியோம் என ஆளுங்கட்சியின் பெரும்பான்மையை கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதேபோல தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை என ஜனாதிபதியும் அறிவித்துள்ளார். எனவே, ஜனாதிபதி தேர்தல் நடப்பது உறுதி. அதனை பிற்போட்டால் அது அராஜக நிலைக்கு வழிவகுக்கும் என்பது ரணிலுக்கு தெரியாமல் இல்லை. எனவே, அவ்வாறானதொரு பலப்பரீட்சையில் அவர் இறங்கமாட்டார் என்றே நம்பப்படுகின்றது.
எனினும், அரசின் பயணம் தொடர்பில் அல்லாமல் சமூகத்தில் வேறு வகையான கருத்தாடல்களை உருவாக்குவது அரசின் ஒரு யுக்தியாக உள்ளது. எதிரணிகளின் எழுச்சி தொடர்பான தகவல்களை மக்களிடம் மறைப்பதற்கான யுக்தியும்கூட அது. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான மனுக்கள் உட்பட பல விடயங்கள் முன்வைக்கப்பட்டு ஊடகங்களின் கவனம் அவற்றின் பக்கம் திருப்பிவிடப்பட்டுள்ளன.