” அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எமது அணி ஆதரவு வழங்கும். அதேபோல இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் யோசனையை நீக்க மொட்டு கட்சி முற்பட்டால் அந்த முயற்சியையும் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அரசியல்வாதிகளும் பொறுப்பு கூறவேண்டும். நானும் தற்போது சாட்சி கூண்டில்தான் நிற்கின்றேன்.
எமது நாடு சுதந்திரமடைந்து 74 வருடங்கள் ஆகின்றன. எனினும், 64 ஆண்டுகள் இந்நாட்டை நான்கு குடும்பங்களே ஆள்கின்றன. ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு அவர்கள் இனம், மதம், மொழி மற்றும் போர் ஆகியவற்றை விற்றனர். எனவே, இனியும் குடும்ப ஆட்சி பின்னால் அணிதிரள நாம் தயாரில்லை.
இடம்பெற்ற தவறை திருத்திக்கொள்வதற்காகவே நான் தற்போது அரசியல் தலைமைத்துவம் வழங்கிவருகின்றேன்.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவோம். நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதி கலைக்கலாம். அதனை நான்கரை வருடங்களாக்குவதற்கு நாம் எதிர்ப்பு.
அத்துடன், இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடவும், எம்.பி.பதவியை வகிக்கவும் உத்தேச 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குழுநிலை விவாதத்தின்போது இந்த ஏற்பாட்டை மாற்றுவதற்கு முற்பட்டால் அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அரசின் பெரும்பான்மை இல்லாது செய்யப்படும்” – என்றார்.
