நாட்டில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் எனக் கூறி, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், 22 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகத்தைத் தலைகீழாக மாற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மகாமான்ய டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தின் டிப்ளோமாதாரர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமை (30) கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
“ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறை ஆகியவற்றிற்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, தடைகள் மற்றும் சமன்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால், இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து, நீதி வழங்கும் செயற்பாட்டை முடக்கி, சட்டத்தின் ஆட்சியை அரசாங்கம் மீறி வருகின்றது.
கடந்த அரசாங்கம் கூட ஜனநாயகத்தையும் மக்களின் வாழ்வையும் சுருக்கிவிட்டு, நாடு ஸ்திரமடைந்து காணப்படுவதாகக் கூறியது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் போது பெரும் செல்வந்தர்களுக்குப் பாதகம் ஏற்படுத்தாமல், ஊழியர் சேமலாப நிதிக்கு (EPF) கடுமையான பாதிப்பை ஏற்படுத்தினர். தற்போதைய அரசாங்கமும் தமக்கு வாக்களித்த விவசாயிகளை மிதித்து, ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது.
தோல்வியடைந்த அரசாங்கம்
குடும்ப ஆட்சியைத் தோற்கடித்து நீதிக்காகவும் விடுதலைக்காகவும் நாட்டைக் கட்டியெழுப்பப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், ஜனநாயக வரலாற்றிலேயே மிகவும் தோல்வியடைந்த அரசாங்கமாகும். கடந்த அரசை விட இந்த அரசாங்கமே மக்களின் வாழ்க்கையை அதிகமாக நாசமாக்கி வருகிறது. அரசாங்கத்தைச் சுற்றிலும் பெரும் தனவந்தர்களே உள்ளனர்; இவர்கள் ‘லும்பன் முதலாளித்துவத்தையே’ (Lumpen capitalism) வலுப்படுத்தி வருகின்றனர்.
இன்று நம் நாட்டு மக்கள் ஒவ்வொரு ஆட்சியின் செயற்பாடுகள், செலவுகள் மற்றும் நன்மைகள் குறித்துச் சிறந்த பகுப்பாய்வை மேற்கொள்ளக் கூடிய அரசியல் பொது அறிவைப் பெற்றிருக்க வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் பயணத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. குழந்தை இறப்பு விகிதம், தாய்மைப் பேற்று இறப்பு விகிதம் மற்றும் ஆயுட்காலம் அதிகரிப்பு வரை பல குறியீடுகளில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், அந்த முன்னேற்றத்தின் வேகம் போதுமானதா என்ற கேள்வி உள்ளது.
சோசலிசத்தால் செல்வத்தை உருவாக்க முடியாது
சிங்கப்பூரை அபிவிருத்தி செய்ய பிரதமர் லீ குவான் யூ ஒரு காலத்தில் இலங்கையையே முன்மாதிரியாகக் கொண்டார். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. எந்தவொரு நாட்டிலும் தீவிர சோசலிசத்தின் மூலம் செல்வத்தை உருவாக்க முடியாது; சீனா கூட முதலாளித்துவத்தையே பின்பற்றுகிறது.
முதலாளித்துவத்தினாலேயே செல்வத்தை உருவாக்க முடியும். எனினும், முதலாளித்துவம் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி, பணக்காரர்களை அதிபணக்காரர்களாகவும் ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் மாற்றுவதால் ‘மனிதாபிமான முதலாளித்துவமும்’ ‘சமூகச் சந்தைப் பொருளாதாரமும்’ அவசியமாகின்றன. மனிதாபிமான முதலாளித்துவம் மூலம் செல்வத்தை உற்பத்தி செய்து, அதை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே நாட்டிற்குத் தேவை.
நடுநிலைப் பாதை மற்றும் அடிப்படை உரிமைகள்
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ஆர். பிரேமதாச ஆகிய இருவருமே இடதுசாரி, வலதுசாரி கொள்கைகளின் சிறந்த குணாம்சங்களை ஒன்றிணைத்த நடுநிலைப் பாதையையே பின்பற்றினர். ‘கம் உதாவ’, ‘மகாவலி’ போன்ற திட்டங்கள் இடதுசாரிக் கொள்கைகளின் வெளிப்பாடுகளாகும்.
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் நீதிமன்றத்தில் சவால் விடுக்கக் கூடிய உரிமைகளாகக் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளே காணப்படுகின்றன. பொருளாதார, சமூக உரிமைகள் காணப்பட்டாலும் அவற்றை நீதிமன்றத்தில் சவால் விடுக்க முடியாது. எனவே, அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமானால், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுடன் பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய உரிமைகளும் அடிப்படை உரிமைகளாக உள்ளடக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.










