ஜோர்தானிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்கள்மீது ஈரான் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள லாராக் (Larak) தீவு மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், “அக்கிரமக்காரனுக்கான தண்டனை” (Punishment of the Aggressor) எனப் பெயரிடப்பட்ட இந்த ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல், ஜோர்தானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அல் அஸ்ராக் ஆகிய அமெரிக்கத் தளங்களைத் துல்லியமாகத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலின் மூலம் “எதிரிகளின் போர் விமானங்கள் தங்கியிருந்த இடங்கள், தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் மற்றும் பராமரிப்பு மையங்கள் அழிக்கப்பட்டு, கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது” என்று IRGC தெரிவித்துள்ளது.

ஈரான் தாக்குதலை அறிவித்த சிறிது நேரத்திலேயே, தமது வான்வெளியை அத்துமீறி நுழைந்த எட்டு ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்து அழித்துள்ளதாக ஜோர்டான் இராணுவம் திங்கள்கிழமை அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணைத் தாக்குதல்களில் அமெரிக்கத் தளங்களில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இஸ்லாமியக் குடியரசின் கட்டுப்பாட்டைப் பலவீனப்படுத்த எதிரி மேற்கொள்ளும் இத்தகைய அக்கிரமங்களும் குற்றங்களும் அவர்களின் விரக்தியைத் தீர்க்காது; ஒவ்வொரு தாக்குதலுக்கும் இதைவிடப் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி கொடுக்கப்படும்,” என்று IRGC எச்சரித்துள்ளது.

Related Articles

Latest Articles