2015 ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுக்கு அமைய மரக்கறி மற்றும் பழங்களின் அறுவடைகயில் 270,000 மெற்றிக் தொன் வீண்விரயமாவதுடன், இதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏறத்தாழ 20 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்தது.
இந்த அறிக்கையின் அவதானிப்புக்கு அமைய இலங்கையில் மரக்கறி மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 30-40 வீதம் என்பதும் புலப்பட்டது.
இலங்கையில் வயது முதிர்ந்தவர்களில் 73 வீதமானவர்கள் போதியளவு மரக்கறி மற்றும் பழங்களை நுகர்வதில்லையென்றும், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் மத்தியிலான மந்தபோசனை மட்டம் 21 வீதமாகக் காணப்படுவதாகவும் இந்த அறிக்கையில் வெளிப்பட்டது.
ஒட்டுமொத்த விவசாயத் துறையையும் உள்ளடக்கும் வகையில் விவசாய கொள்கையொன்றுக்கான குறைபாடு குறித்தும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
தேசிய விவசாயக் கொள்கை தொடர்பான இறுதி வரைபு 2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளபோதும் இது இன்னமும் வரைபாகவே காணப்படுகின்றமை தொடர்பிலும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான சந்தையை உள்ளடக்கிய விவசாயக் கொள்கையொன்றுக்கான தேவை காணப்படுவது குறித்தும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் மரக்கறி மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பை குறைப்பது மற்றும் நியாயமான விலைக்கு அவற்றை விற்பனை செய்வதில் அரசாங்க நிறுவனங்களின் தலையீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட செயலாற்று அறிக்கை அரசாங்கக் கணக்குகள் குழுவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்கண்ட விடயங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் பாரிய பிரச்சினையாகக் காணப்படும் இடைத்தரகர்களால் அதிக இலாபம் ஈட்டப்படுவதைத் தடுப்பதற்கும், மரக்கறி மற்றும் பழங்களில் அறுவடைக்குப் பின்னர் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இக்குழுவின் உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.