இலங்கையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கத்தின் ஆரம்ப புள்ளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. புலனாய்வுப் பிரிவினரும், சுகாதார அதிகாரிகளும் தொடர்ந்தும் இது பற்றி அவதானம் செலுத்திவருகின்றனர்.
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த திவுலப்பிட்டிய பகுதி பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அத்தொழிற்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் பலருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது.
இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல்மூலம் கடந்த 3 ஆம் திகதி முதல் நாட்டில் நேற்றுவரை ஆயிரத்து 770 மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் கண்டறியப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பெண்ணுக்கு எவ்வாறு வைரஸ் தொற்றியது என்பது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. எனினும், பல நாட்கள் கடந்தும் ஆரம்ப புள்ளியை இன்னும் கண்டறியமுடியாமல் உள்ளது.