4 ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்துக்கொண்டுவாழும் தோட்ட மக்கள்! என்றுதான் தீர்வு?

நோர்வூட் – கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள கிளங்கன் தோட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ஆலமரத்தின் கிளையொன்று, லயன் குடியிருப்புமீது முறிந்து வீழ்ந்ததால் வீடுகள் சேதமடைந்தன. அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே குடியிருப்பாளர்கள் வாழ்ந்துவந்தனர்.
அனர்த்தம் ஏற்பட்டு 4 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் இன்னும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
2016 ஏப்ரல் 18ஆம் திகதி ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மேற்படி தோட்டத்தில் 100 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்த பாரிய ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்தது. இதனால் 24 வீடுகளைக் கொண்ட குறித்த தொடர் குடியிருப்பில் இரண்டு வீடுகளும் ஆலயமும் முற்றாக சேதமடைந்தன.
இந்நிலையில் ஒரு குடும்பம் அத்தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் ஏனைய குடும்பங்கள் தற்காலிக வீடுகளிலும் ஏனைய 18 குடும்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தொடர் குடியிருப்பிலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 100 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த தொடர் குடியிருப்பு பல இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் சில இடங்களில் அத்திவாரம் சேதமடைந்த நிலையில் எப்போது வேண்டுமானால் இடிந்து வீழும் நிலையிலேயே இவர்கள் வாழ்ந்து வருவதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள எட்டடி காம்பாராக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஐந்து பேர் வாழ்கின்றனர்.இதில் க.பொ.த.சாதாரண தரம் க.பொ.த உயர்தரம் படிக்கும் மாணவர்களும் இருக்கின்றனர்.இடவசதிகள் இன்றி கல்வியினை தொடர முடியாத நிலையிலேயே பல மாணவர்கள் இருப்பதாக இங்கிருக்கின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
கே. சுந்தரலிங்கம்

Related Articles

Latest Articles