4 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளேன் – திகா

” மலையகத்தில் கடந்த நான்கரை வருட காலமாக பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளேன், தனிவீடுகள் கட்டிக் கொடுத்துள்ளேன், காணி உரிமை பெற்றுக்கொடுத்துள்ளேன், உறுதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்துள்ளேன்,காபட் வீதிகளை அமைத்துக் கொடுத்துள்ளேன், பிரதேச சபைகளை அதிகரித்துள்ளேன், அதிகார சபையினை உருவாக்கியுள்ளேன். ஆனால் இன்று மலையத்தில் எவ்வித அபிவிருத்தியினையும் மேற்கொள்ளாதவர்கள் வாய்க்கூசாமல் பொய் கூறுகின்றனர்.”

-இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துலை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” மலையகத்தில் இன்று 4000 வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளேன். அதில் 2000 வீடுகளைப் பயனாளிகளிடம் ஒப்படைத்துள்ளேன்,2000 வீடுகள் கட்டி முடித்த போதிலும் அவற்றை இன்னும் தண்ணீர் ,மின்சாரம் இல்லாத காரணத்தினால் ஒப்படைக்கவில்லை. அதனை எனக்குப் பின் வந்த அமைச்சர்கள் செய்திருக்க வேண்டும்.

சஜீத் பிரேமதாச அவர்கள் தோல்வியடைந்தவுடன் எனது அமைச்சுப்பதவிகள் இல்லாது போனது. அதனால் எனது அபிவிருத்தி தொடர முடியாது போனது.நான் லயத்தில் பிறந்த காரணத்தினால் எனக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும் அதனால் எனது காலத்தில் உங்களுக்கு உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளேன்.

நான் செய்த சேவைகள் என்னவென்று ஒரு பத்திரிகை மூலம் உங்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளேன். ஆனால் இன்று ஒரு சிலர் ஏ4 சீட்டில் தங்களது இலக்கத்தை மட்டும் கொடுத்துள்ளார்கள். ஆகவே உங்களுக்கு யார் சேவை செய்தார் என்பது நன்கு தெரியும். அதே நேரம் இந்த அரசாங்கம் வந்த பின் விலைவாசிகள் அதிகரித்துள்ளது.

தமிழ் பிரதிநிதித்துவத்தினை இல்லா தாக்கப்பார்க்கிறது.நமக்குத் தமிழ் பிரதிநிதித்துவம் இருந்தால் மாத்திரம் தான் நமது பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் கதைக்கலாம். எங்களிடம் அதிகாரம். இருந்தால் தான் தோட்ட நிர்வாகமும் பொலிஸ் அதிகாரிகளும் பயப்படுவார்கள். ஆனால் இன்று மலை மலையாக வந்து வாய் கூசாமல் பொய் சொல்லுகிறார்கள். ” – என்றார்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles