42 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி!

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் தனஞ்ச டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, இலங்கையின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

20.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ச்சியாக மழை பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் பவுமா ஒருபுறம் நிலைத்து நின்றாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.

இறுதி கட்டத்தில் கேஷவ் மகராஜ், பவுமா உடன் சிறிது நேரம் நிலைத்து நிற்க அணி கவுரவமான நிலையை எட்டியது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த பவுமா 70 ரன்களிலும், கேஷவ் மகராஜ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முடிவில் 49.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது .தொடக்கம் முதல் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி தடுமாறியது . மார்கோ ஜான்சனின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இலங்கை அணியில் 5 வீரர்கள் டக் அவுட் ஆகினர் .இறுதியில் இலங்கை அணி 13.5 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது .அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்தார் .

தென் ஆப்பிரிக்க அணியில் மார்கோ ஜான்சன் 7விக்கெட்டுகளை வீழ்த்தினார் . தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி 149 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது .

Related Articles

Latest Articles