கற்பிட்டி தேத்தாவாடிய பகுதியில் தோட்டமொன்றில் அனுமதிப்பத்திரமில்லாமல் கடற்சிப்பிகளை மறைத்து வைத்திருந்த ஒருவர் நேற்று (25) அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரமில்லாமல் கடற்சிப்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய அந்த பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 5636 கிலோ கடற்சிப்பிகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடைய கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்சிப்பிகளை பயன்படுத்தி கோழிகளுக்கான உணவுகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அலங்கார பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த கற்பிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட கடற்சிப்பிகள் கற்பிட்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.










