நாட்டில் தற்போது 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. திங்கட்கிழமை (02) காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை காலை 5 மணிக்கு 49 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் ஏனைய 68 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” மேல் மாகாணம் உட்பட நாட்டில் 117 பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே 68 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த நிலையில் புதிதாக 49 பிரிவுகள் இணைக்கப்பட்டன.
கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பு மாவட்டத்தில் 21 பொலிஸ் பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும், குருணாகலை மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும். திங்கட்கிழமை இப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது.
புதிதாக இணைக்கப்பட்ட 49 பிரிவுகளில் நீக்கப்படும். அதுவும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளிலேயே இறுதி தீர்மானம் தங்கியுள்ளது. எது எப்படியிருந்தாலும் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் தீர்மானம் தற்போதைக்கு இல்லை.” – என்றார்.
அதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று காலை 6 மணிவரை, ஊரடங்கு சட்டத்தைமீறிய ஆயிரத்து 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.