74வயதில் கணிதபாட பரீட்சை எழுதிய முதியவர்!

நெலுவ, களுபோவிட்டியனை வசிப்பிடமாகக் கொண்ட 74 வயதான சந்திரதாச கொடகே எனும் முதியவர், நெலுவ தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாட பரீட்சைக்கு தோற்றினார்.

இதன்படி, கடந்த சனிக்கிழமையன்று (28) விஞ்ஞான பாட பரீட்சை தோற்றியிருந்த சந்திரதாச கொடகே, நேற்று (30) கணித பாட பரீட்சைக்கும் தோற்றியிருந்தார்.

கடந்த வருட க.பொ.த சா/த பரீட்சையில் விஞ்ஞான பாடத்திற்கு தோற்றி அந்த பாடத்தில் சாதாரண (S) சித்தி பெற்றிருந்தார்.

இவ்விடயம் குறித்து சந்திரதாச கூறுகையில்,

“எனக்கு இப்போது 74 வயதாகிறது. 1970 ஆம் ஆண்டு தான் நான் முதன் முதலாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினேன். அலபலதெனிய மகா வித்தியாலயத்தில் படித்தேன். அந்தப் பரீட்சையில் நான்கு திறமை சித்திகள் பெற்றிருந்தேன். பெற்றாலும் எனக்கு வேலை கிடைக்கவில்லை.

ஆத்ம திருப்திக்காக பரீட்சை எழுதுகிறேன். புத்தகங்கள் படிப்பதன் மூலம் அறிவு கிடைக்கிறது. இப்போது பாடத்திட்டம் மாறிவிட்டது. நவீனமயமாக்கப்பட்ட கல்வி முறை உள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த முறை விஞ்ஞான பாட பரீட்சை கடினமாக உள்ளது. பரீட்சைக்கு அமர்வதோடு மாத்திரம் கற்றலை மட்டுப்படுத்த முடியாது. சாகும் வரை கற்க வேண்டும். கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன” என்றார்.

Related Articles

Latest Articles