பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவேண்டும். அதில் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா என்ற விடயமும் உள்ளடக்கப்படவேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (5) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்தது. தேர்தல் காலத்தில் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இன்றும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
தற்போது அடிப்படை சம்பளமாக 750 ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இதனை ஏற்கமுடியாது. தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவேண்டும். அதற்கான புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவேண்டும். அச்சட்டத்தின் அடிப்படை சம்பளம் ஆயிரம் என்ற விடயமும் உள்ளடக்கப்படவேண்டும்.
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படவேண்டும். அதற்கான தேசிய வேலைத்திட்டம் அவசியம். ” – என்றார்.