நானுஓயா கெல்சி தோட்டத்தில் முறையான வீதி வசதியின்றி 750 குடும்பங்கள் அவதி: உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நானுஓயா பிரதேசத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், பெரகும்புர (476/B) கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கெல்சி மகளிய பகுதியில் அமைந்துள்ள கெல்சி தோட்டத்தில் சுமார் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியில் 370-க்கும் மேற்பட்ட சிறுவர்களும் 150-க்கும் மேற்பட்ட முதியவர்களும் வாழ்கின்றனர். எனினும், இத்தனை குடும்பங்கள் வாழும் இந்தப் பகுதிக்கு இதுவரை முறையான வீதி வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழைக்காலங்களில் இந்தப் பாதைகள் முற்றிலும் சேறும் சகதியுமாக மாறுவதுடன், மண் சரிவு மற்றும் பாறைக்கற்கள் சரிந்து விழும் அபாயமும் நிலவுகிறது.

இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் தினமும் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, 5-ஆம் ஆண்டிற்கு மேல் கல்வி பயிலும் மாணவர்கள் நானுஓயா மற்றும் நுவரேலியா டெஸ்ட் போர்ட் (Desford) பாடசாலைகளுக்கே செல்ல வேண்டியுள்ளது. ஆனால், வீதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதால், மாணவர்கள் தினமும் இந்த ஆபத்தான பாதையிலேயே நடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை அவசரத் தேவைகளுக்காக நுவரேலியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கும் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாதது இப்பகுதி மக்களுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

ஒருபுறம் தேயிலைத் தோட்டங்களில் கடுமையாக உழைக்கும் மக்கள், மறுபுறம் கல்விக்காகப் போராடும் மாணவர்கள், மற்றொரு புறம் மருத்துவச் சிகிச்சைக்காகப் போராடும் நோயாளிகள் என இவர்களுக்குத் தேவையானது வெறும் அனுதாபம் அல்ல; அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான போக்குவரத்துப் பாதையே ஆகும்.

எனவே, நுவரேலியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலக அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலமையை ஆராய வேண்டும் எனவும், வாகனங்கள் பயணிக்கக் கூடிய வகையில் முறையான வீதியை அமைத்துத் தருமாறும் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மழைக்காலத்தில் வீதிப் போக்குவரத்து முடங்குவது என்பது வெறும் பயணச் சிக்கல் மட்டுமல்ல; அது ஒரு குழந்தையின் கல்வியையும், நோயாளியின் உயிரையும், கர்ப்பிணித் தாயின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் தீவிரப் பிரச்சினையாகும் என்பதை அதிகாரிகள் உணர்ந்து உடனடியாகச் செயற்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் (செ.தி.பெருமாள்)

Related Articles

Latest Articles