வாட்டி வதைக்கும் வறட்சி: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 37 சதவீதமாக சரிவு! தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 74 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 37 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், பொதுமக்களும் அனைத்து நீர் பயனாளர்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது கிடைக்கக்கூடிய நீர், எஞ்சியுள்ள யால பருவ விவசாய நடவடிக்கைகளுக்கும், முக்கிய நீர்த்தேக்கங்கள் மூலம் நீர் வழங்கப்படும் பகுதிகளின் குடிநீர் தேவைகளுக்கும், நவம்பர் டிசம்பர் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பருவமழை வரை போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பல நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் மிகவும் ஆபத்தான அளவுக்கு குறைந்துள்ளது. அதிகரித்துள்ள நீர் ஆவியாகுதல் மற்றும் ஏனைய வழிகளில் ஏற்படும் நீர் இழப்புகளும் கிடைக்கக்கூடிய நீரின் அளவை மேலும் குறைத்துள்ளன.

யால பருவ விவசாயம் இன்னும் நிறைவடையாத நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் உள்ள விவசாயிகள், தண்ணீரை மிகவும் திறமையாகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த மழை கிடைக்கும் வரை தற்போதுள்ள நீர் கையிருப்பை பாதுகாப்பதற்காக, பொதுமக்களும் தங்களது தினசரி நீர் பயன்பாட்டை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களில் நிலைமையை சமாளிப்பதற்காக கிணறுகள் மற்றும் மாற்று கால்வாய்களை பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பருவகால பயிர்ச்செய்கைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் கீழ் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களுக்குத் தேவையான நீரை யால பருவத்தின் இறுதி வரை தொடர்ந்து வழங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles