கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் இன்று (08) அதிகாலை கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டின்சின் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயா சுற்றுசூழலை அழித்து, அக்காப்பிற்கு அருகில் செல்லும் உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பியிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று வளி அமுக்கக் கருவி மூலம் காற்றை உட்செலுத்தி, ஆற்றுப் படுக்கையிலும் கரையோரப் பகுதிகளிலும் இவர்கள் இம்மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சட்டவிரோத நடவடிக்கை குறித்து நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமாரவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் குழுவொன்று பொகவந்தலாவை பகுதிக்கு அனுப்பப்பட்டு இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கைக்காக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். சந்தேகநபர்கள் மாணிக்கக்கல் அகழ்விற்கும் , உளவு பார்ப்பதற்கும் பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகளும், அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் இரத்தினபுரி, பொகவந்தலாவை மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் எனச் சோதனையை நடத்திய பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (08) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
