மகாசங்கத்தினரை இலக்கு வைக்கிறது என்பிபி அரசு: சபையில் சீறிய நாமல்

“இனவாதத்திற்கு இடமில்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மகா சங்கத்தினருக்கும், பௌத்த தர்மத்திற்கும், பௌத்த கலாசாரத்திற்கும் இந்த அரசாங்கம் தாக்குதல் நடத்த முற்பட்டால், அது இந்நாட்டில் இல்லாத ஒரு புதிய இனவாதத்தைத் தூண்டும் செயலாக அமைந்துவிடும்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

“ஞானசார தேரர் குறித்து பௌத்த பீடங்கள் விடுத்த அறிவுறுத்தல்களுக்கு இந்த அரசாங்கம் செவிமடுக்கவில்லை. மகா சங்கத்தினர் இன்று திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுகின்றனர்.

மறுபுறத்தில், புலிகளை நினைவுகூருவதற்கு இடமளிக்கப்படுகிறது. ஆனால், ‘புலி’ எனக் கூறியதற்காக அர்ச்சுனாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது. உங்கள் அமைச்சர்கள் சென்று திலீபனுக்கு மாலை அணிவிப்பது சரியான செயலா?

‘இனவாதத்திற்கு இடமில்லை’ எனக் கூறிக்கொண்டு இந்நாட்டில் மகா சங்கத்தினருக்கும், பௌத்த தர்மத்திற்கும், பௌத்த கலாசாரத்திற்கும் தாக்குதல் நடத்த முற்பட்டால், இல்லாத இனவாத மொன்றைத் தூண்டும் செயலாக அது அமைந்துவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

அதேவேளை, வேறொரு நாட்டின் மன்னரிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோருகிறார். ஆனால், அந்த மன்னிப்பை இங்குச் செயலில் காட்ட வேண்டும்.

அந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்பது தவறில்லை; மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான முன்னுதாரணத்தை இங்குச் செயலில் வெளிப்படுத்த வேண்டும்” என்றார் நாமல் ராஜபக்ச

Related Articles

Latest Articles