தோட்ட காணியை வெளியாருக்கு வழங்க முயற்சி: பதுளையில் கடும் எதிர்ப்பு

பதுளை மாவட்டத்தின் வேவஸ்ஸ தோட்டத்தில் ரப்பர் செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை வெளிநபர்களுக்கு உபகுத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைக்குத் தொழிலாளர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணிகளை உபகுத்தகைக்கு வழங்குவது தொடர்பாக, பதுளை உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழில் திணைக்கள அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை கடந்த 06.10.2026 செவ்வாய்க்கிழமை அன்று பதுளையில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் (LJEWU) பிரதிநிதி சிவசாமி முத்துக்குமார் மற்றும் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் செல்லையா ஆனந்தபாபு உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

வேவஸ்ஸ தோட்டத்தின் ஆகரதென்ன மற்றும் கிளனல்பின் (Glenalpin) பிரிவுகளில் 2001 / 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேயிலைச் செடிகள் அகற்றப்பட்டு, ரப்பர் செய்கைக்கான முன்னோடித் திட்டமாக சுமார் 30 ஏக்கர் காணியில் ரப்பர் கன்றுகள் நடப்பட்டன. ஆரம்பத்தில் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு காணப்பட்ட போதிலும், திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

எனினும், கன்றுகள் நடப்பட்டதன் பின்னர், அவற்றின் முறையான பராமரிப்புக்குத் தேவையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட எந்தவிதமான இடுபொருட்களையும் தோட்ட நிர்வாகம் உரிய முறையில் வழங்கவில்லை. 2016ஆம் ஆண்டில் ரப்பர் மரங்கள் பால் வெட்டுவதற்கான நிலையை அடைந்த பின்னர், தொழிலாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு ரப்பர் பால் வெட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2016 முதல் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 25 முதல் 40 தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ரப்பர் மரங்களின் பராமரிப்பு மற்றும் பால் வெட்டும் பணிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதில் தோட்ட நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, தொழிலாளர்கள் தங்களது சொந்தச் செலவில் தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொண்டு, தோட்டத்தின் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாகத் தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், 2026 செப்டெம்பர் மாதத்தில் குறித்த ரப்பர் காணியை வெளிநபர்களுக்கு உபகுத்தகைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், ரப்பர் மரங்களை எண்ணி ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தொழில் திணைக்கள அதிகாரி முன்னிலையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. அதில் LJEWU சார்பில் சிவசாமி முத்துக்குமார் கலந்துகொண்டதுடன், தோட்ட நிர்வாகத்தின் சார்பில் உதவி முகாமையாளர்கள் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பெருந்தோட்ட முகாமையாளர் நேரடியாகப் பங்கேற்காத காரணத்தால் முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவொன்றை எட்ட முடியவில்லை என சிவசாமி முத்துக்குமார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்ட முகாமையாளரும் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

ரப்பர் காணி உபகுத்தகைக்கு வழங்கப்பட்டாலும், அங்கு தற்போதுள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து பணியில் அமர்த்தப்படுவார்களாயின், அவர்களின் அடிப்படைத் தொழில் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் எனத் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதிய நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதேவேளை, நடைமுறையில் உள்ள சம்பள விதிமுறைகளுக்கு அமைவாக முறையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

தேயிலைத் தோட்டப் பணிகளுக்கான சம்பளம் மற்றும் ரப்பர் பால் வெட்டும் பணிக்கான தனித்துவமான சம்பள முறைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் தற்போதைய வேலைவாய்ப்புப் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

வேவஸ்ஸ தோட்டத்தின் தீனகல்ல உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்குத் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும்போது பாதுகாப்பற்ற டிராக்டர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான மற்றும் முறையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்கம் கோரியுள்ளது.

மேற்கண்ட நிபந்தனைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகள் எழுத்துமூலம் உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே உபகுத்தகைத் திட்டத்திற்குத் தொழிற்சங்கம் இணங்க முடியும் என சிவசாமி முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் தற்போதைய வேலைவாய்ப்பு, சம்பளம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில், தோட்ட நிர்வாகம், உபகுத்தகைதாரர்கள், தொழில் திணைக்களம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து இறுதித் தீர்வொன்ற எட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles