கள்ளத்தோணி கருத்தை அனுமதிக்க முடியாது: தகுந்த நடவடிக்கை

கள்ளத்தோணி கருத்தை அனுமதிக்க முடியாது: தகுந்த நடவடிக்கை

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினது ஆலோசனைக் குழு கூட்டம் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்றைய தினம் (06.10.2026) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்டப் பிரதேசங்களில் மக்கள் முகங்கொடுத்துவரும் பல்வேறுபட்ட அவசரப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, பின்வரும் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆழமான விவாதங்களும் முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டன.

நாளொன்றுக்கான எடுக்கப்பட வேண்டிய தேயிலை கொழுந்தின் அளவை அதிகரிப்பது தொடர்பான சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

தோட்டப் பகுதிகளில் காணப்படுகின்ற ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

குடியிருப்புகள் மற்றும் மலசலக்கூட வசதிகளை மேம்படுத்துவதற்காக காணி மற்றும் நில ஒதுக்கீடின்மை தொடர்பில் நிலவும் தடைகள் சுட்டிக்காட்டப்பட்டன.

தோட்டத் தொழிலாளர்கள் மீதான அத்துமீறிய தாக்குதல்கள் மற்றும் முறைதவறிய நடத்தைச் சம்பவங்கள் குறித்து கடுமையான கவலை தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி , லவர்ஸ்லீப் தோட்டத்தில் தோட்ட அதிகாரி ஒருவர் தோட்டத்தொழிலாளர்களை “கள்ளத்தோணி” என மிகவும் இழிவாகவும் தரக்குறைவாகவும் மிரட்டிய மனிதாபிமானமற்ற சம்பவம் குறித்தும் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இத்தகைய செயற்பாடுகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், இதுகுறித்து உடனடியாகத் தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் தேயிலை, சிறு தேயிலை தோட்டம், தென்னை, கித்துல் மற்றும் பனை போன்ற பிரதான பயிர்ச்செய்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கைத்தொழில்களில் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles