எட்டு வயது நிரம்பிய சிறுவனுக்கு கசிப்பினை பருக்கிவிட்டு, தலை மறைவாகியிருந்த சிறுவனின் தாய் மாமன் கைது செய்யப்பட்டு, பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டப் போது, நீதிபதி கீர்த்தி கும்புறுஹேன, அந்நபரை 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
ஹல்துமுள்ளைப் பகுதியின் நீட்வூட் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த லெட்சுமன் சிவகுமார் என்ற 42 வயது நிரம்பிய நபரே, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவராவார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நபரின் சகோதரியின் மகனான எட்டு வயது நிரம்பிய சிறுவனுக்கு அந்நபர் ஆகக் கூடுதலான கசிப்பினைப் பருக்கியமையினால், அச் சிறுவன் ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சிறுவனின் தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்த நிலையில், அவரைப் பற்றிய எவ்வித தகவலும் இல்லாதுள்ளதென்றும், சிறுவனின் தகப்பனும் மதுவிற்கு அடிமையாகிய நிலையில் இருந்து வருவதும், குறிப்ப்pட்ட சிறுவனுக்கு சிறுவனின் தாய் மாமனான நபர், கசிப்பினை ஆகக் கூடுதலாக பருக்கியமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசன்ன த சில்வா, மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
பதுளை நிருபர் – எம். செல்வராஜா, பதுளை