இலங்கையில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய காரணங்களால் நாளொன்றுக்கு சுமார் 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டாக்டர் மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் “Rataama Ekatata” திட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான ஊடக சந்திப்பில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
நாட்டில் ஒவ்வொரு நாளும் இவ்வளவு அதிகமான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கும் வேறு ஒரு தனிப்பட்ட காரணியை கண்டறிவது கடினம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய உயிரிழப்புகளில் புகைப்பிடித்தலே பிரதான காரணியாக இருப்பதாக தெரிவித்த டாக்டர் மனோஜ் பெர்னாண்டோ, மது அருந்துவதால் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 15 பேர் வரை உயிரிழப்பதாக மதிப்பிடப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அதேவேளை, சட்டவிரோத போதைப்பொருட்களின் பாவனையும் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புகையிலை மற்றும் மது போன்ற சட்டபூர்வமான போதைப் பொருட்களின் பயன்பாடு, பின்னர் சட்டவிரோத போதைப்பொருட்களை நாடுவதற்கான ஆரம்பப் பாதையாக பல சந்தர்ப்பங்களில் அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்களின்படி, பின்னர் ஹெரோயின் பயன்படுத்த ஆரம்பிக்கும் பலர் அதற்கு முன்னதாக புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருந்துள்ளதாகவும், கஞ்சா பயன்படுத்துபவர்களில் பலர் ஏற்கனவே மது அல்லது சிகரெட் பயன்படுத்தியவர்களாக இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளுடன், சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் பாரிய விளைவுகள் ஏற்படுவதாக கூறிய அவர், இதனைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருள் பாவனையால் நேரடியாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை விரிவான ஆய்வுகள் மூலம் உறுதியான எண்ணிக்கை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கிடைக்கக்கூடிய மதிப்பீடுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையால் நாளொன்றுக்கு மேலும் 10 முதல் 15 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புகைப்பிடித்தல், மது மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை ஆகியவற்றுடன் தொடர்புடைய உயிரிழப்புகளை ஒன்றாகக் கணக்கிடும்போது, இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக மதிப்பிடப்படுவதாக டாக்டர் மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
