அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் கடும் அழுத்தங்களையடுத்து காசாவுக்கு கூடுதல் மனிதாபிமான உதவிகள் கிடைக்க எரேஸ் எல்லையை திறப்பதற்கு இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.
காசாவில் ஐ.நா. பணியாளர்கள்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எழுவர் கொல்லப்பட்டுள்ள விவகாரம் இஸ்ரேலுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.
தொடர்ந்து கடும்போக்கை கடைபிடித்தால் இஸ்ரேலுக்கான ஆதரவை மீள்பரிசீலனை செய்ய நேரிடும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்நிலையிலேயே இஸ்ரேல் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரில் இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்மட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் காசா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். ஆனால், காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் பெரும்பாலான எல்லைகளை மூடியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் மத்திய காசாவில் மனிதாபிமான பணியாளர்கள்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அந்நாட்டுக்கு பெரும் ஆப்பாக மாறியுள்ளது. ஆஸ்திரேலிய பணியாளர் உட்பட ஏழு ஐ.நா. தன்னார்வ பணியாளர்கள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளும் கண்டித்துள்ளன.
மக்களை பாதுகாப்பதற்கான போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலை விமர்சித்திருந்தார்.இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உடன் தொலைபேசி ஊடாகவும் உரையாற்றினார். பேசினார்.
இதன்போது காசா மக்களுக்கு கூடுதல் மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதன்அடிப்படையில் எரேஸ் எல்லையை திறக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த எல்லை இஸ்ரேல்- காசா முனை இடையே உள்ளது. இந்த எல்லை வழியாக மக்கள் காசா முனையில் இருந்து இஸ்ரேலுக்கு செல்ல முடியும்.கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்த எல்லையை இஸ்ரேல் மூடியது.
மக்கள் இந்த எல்லையை கடக்கவும், இந்த எல்லையின் வான்வழியை பயன்படுத்தவும் தடைவிதித்திருந்தது. இந்த நிலையில் கூடுதல் மனிதாபிமான உதவிகள் காசாவிற்கு கிடைக்கும் வகையில் இந்த எல்லை திறந்து விடப்படுகிறது.
அதேபோல் அஷ்தோத் துறைமுகத்தையும் பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்து.
