அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாட்டு இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்தனர் எனக் கூறப்படும் இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கொத்மலை, மாஸ்வெல , மாவில பகுதிகளில் உள்ள எறுமை மாடுகள் மற்றும் வீடுகளில் வளர்க்கும் மாடுகள் நீண்ட காலமாக காணாமல் போய் வந்துள்ளன.
இவ்வாறு பிடிக்கப்படும், களவாடப்படும் மாடுகளே இறைச்சிக்காக வெட்டி, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
கம்பளை, ஜயமாலப்புர பகுதியில் உள்ள வீடொன்றை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர். இதன்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 95 கிலோ இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 43 வயது நபரொருவரும், அவருக்கு உதவியாக இருந்த 27 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கம்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புடைய ஏனையோருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது.