34 வருட கால கல்வி சேவையிலிருந்து பணிஓய்வு பெற்ற அதிபர் எஸ். முருகையா !

பதுளை மாவட்டம் – லுணுகலை பிரதேசத்தில் எழில்கொஞ்சும் சுவிண்டன் தோட்டத்தில் திரு.திருமதி சிலம்பரம் – வள்ளியம்மை தம்பதிகளின்
மகனாக பிறந்த எஸ்.முருகையா தனது ஆரம்ப கல்வியையை சுவிண்டன் தமிழ் வித்தியாலயத்திலும் பின்னர் இடைநிலை, உயர்தர கல்வியை லுணுகலை இராமகிருஸ்ணா இந்து கல்லூரியிலும் கற்றவர் ஆவார்.

பின்னர் 1990 ஆம் ஆண்டு மலையக பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களில் எஸ். முருகையாவும் தெரிவானார்.

தனது ஆசிரியர் சேவையை முதல் நியமன பாடசாலையாகிய ஹொப்டன் பது/ கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் தொடங்கினார்.
தொடர்ந்து அடாவத்தை, பது/திருமகள் தமிழ் வித்தியாலயம்,
பது/அல்அமீன் முஸ்லிம் வித்தியாலயம், பது/ ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராக சேவையாற்றியுள்ளார்.

குறித்த பாடசாலைகளில் சேவையாற்றிய பன்முக ஆற்றல்மிக்க ஆசிரியர் எஸ் .முருகையா தன்னிடம் கல்வி கற்ற மாணவர்கள் கற்றுயர்ந்திட அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமுடன் கரிசனைமிக்கவராகவும் கண்டிப்புமிக்கவராகவும் விளங்கினார்.

இவர் சேவையாற்றிய பாடசாலைகளின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளதோடு சக ஆசிரியர் உறவுகள், பெற்றோர்கள், மாணவர்கள், சமூகநலன் விரும்பிகள் ஆகியோரிடம் இயல்பாக நட்புறவாடும் நல்ல பண்பாளராகவும் விளங்குகின்றார்.

இவரிடம் கற்றுயர்ந்து அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற இவரது மாணவர்கள் ” எங்கள் வாழ்வுயர வழிகோலிய
ஆசிரியர்களில் முருகையா சேர் முதன்மையானவர் என பெருமையுடன் கூறி வாஞ்சையுடன் வாழ்த்துகின்றனர்.

எஸ் முருகையா ஆசிரியரின் சீர்மிகு கல்வி சேவையின் மகத்துவத்தின் காரணமாக அதிபர் நியமனம் கடந்த 2007 ஆம் பிறந்த சவிண்டன் தான் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற ஊர் பாடசாலையாகிய
பது/ சுவிண்டன் தமிழ் வித்தியாலயத்திற்கே அதிபராக தெரிவு செய்யப்பட்டார்.

பாடசாலையின் தலைமையாசிரியராக பொறுப்பேற்ற எஸ். முருகையா இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி பாடசாலையும் சமூகமும் ஒன்றிணைந்த சிறந்தோர் ஆரம்ப பிரிவு பாடசாலையொன்றைக் கட்டியெழுப்பியதோடு பசறை கல்வி வலயத்தில் சிறந்ததோர் ஆரம்பப் பிரிவு பாடசாலையொன்று உருவாகுவதற்கு வழிசமைத்துள்ளமைப் போற்றத்தக்கது.

குறிப்பாக தரம் இப்பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் சிறந்தபெறுபேறுகளைப் பெற்று வருகின்றனர். இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்குகின்றனர். அத்தோடு அதிபர் எஸ்.முருகையா சுவிண்டன் தோட்ட ஆலய அறங்காவலர் சபையின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றதோடு நல்லதோர் சமூகம் உயர்வுபெறுவதற்கு முன்னின்று சமூக அறப்பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த பெருமகனாகப் போற்றப்படுகின்ற அதிபர் எஸ். முருகையா கடந்த 25.04.2024 அன்று தனது கல்வி சேவையிலிருந்து பணி ஓய்வுபெற்றுள்ளார். புதிதாக இலங்கை அதிபர் சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெற்றுவந்த அதிபர் திருமதி சண்முகப்பிரியாவை இன்முகத்தோடு வாழ்த்தி வரவேற்று தனது நிர்வாகப்பொறுப்பை ஒப்படைத்து விடைபெற்றார்.

இவரது பணி ஓய்வினையொட்டி பாடசாலை சமூகத்தினரும் லுணுகலை பிரதேச சமூகநல அமைப்புகளும் பிரியாவிடை விழாக்களை இனிதே நடாத்தி கௌரவித்து வருகின்றனர்.

அதிபர் எஸ். முருகையாவின் உயரிய கல்விசேவையைப் பாராட்டி ஊவா மாகாண கல்வி சமூகமும் பசறை வலய கல்வி பணிப்பாளர் ஸரீனா பேகம் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளும் ஏனைய நட்புறவு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் வாஞ்சையுடன் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

( ந.மலர்வேந்தன் )

Related Articles

Latest Articles