பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்புக்கு எதிராக முதலாளிமார் சம்மேளனம் சட்ட நடவடிக்கை எடுத்தால், தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, தொழிலாளர்களுக்கு சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொட்டகலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.
எனினும், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் இணக்கப்பாடு இன்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்ததோடு, இணக்கப்பாடு இன்றி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதாக தோட்ட முதலாளிமார் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தோட்டக் கம்பனிகளுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டமையினால் தமது தொழிற்சங்கம் நீதிமன்றத்தை நாட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பெருந்தோட்ட நிறுவனங்களின் சட்ட சமரையும் எதிர்கொள்ள ஜனாதிபதிபதி தயாராகியுள்ளார்.










