இலங்கையில் மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை நிறுவக செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கு உதவுவேன் என்று ஆன்மீக குரு, அமைதி தலைவர், வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தெரிவித்தார்.
நுவரெலியா சீத்தா எளிய பிரதேசத்தில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா (19.05.2024)ஞாயிற்று கிழமை காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்த மஹாகும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கை வந்திருந்த குருஜி, நுவரெலியா “கிறேன்ட்” ஹோட்டலில், இதொகா பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை உட்பட இதொகா பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போதே மலையக மக்களின் நலத்திட்டத்திற்காக பல கோரிக்கைகளை காங்கிரஸ் உறுப்பினர்கள் முன் வைத்தனர்.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட குருஜி, வாழும் கலை அறக்கட்டளை அமைப்பின் செயற்பாட்டை மலையகத்திலும் பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும்,பயிற்சி நிலையங்களை ஆரம்பிக்க இடங்கள் உள்ளிட்ட வசதிகளை எதிர் பார்ப்பதாகவும் இதற்கான உதவிகளை தனது அறக்கட்டளை நிறுவகம் ஊடாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.
ஆ. ரமேஷ்

அத்துடன் ஆன்மீக கற்கை நெறி பாடசாலைகள் ஆரம்பித்தல், வாழும் கலை பயிற்சிகள், பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்புகள்,உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தனது அறக்கட்டளை ஊடாக செய்து தருவதாகவும் குருஜி இதன் போது தெரிவித்தார்.
