இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றிருந்தார். இந்தியா என்பது எமது பெரிய அண்ணன். எனவே, அந்நாட்டுடன் நெருக்கமான உறவை பேண வேண்டியது அவசியம்.
இந்திய பிரதமர் விரைவில் இலங்கை வரவுள்ளார். திகதி விவரம் இன்னும் உறுதியாகவில்லை. ஆகஸ்ட் மாதமளவில் வருவார் என எதிர்பார்க்கின்றோம்.
ஏனைய அயல் நாடுகளைவிடவும் இலங்கை தொடர்பில் இந்தியா கூடுதல் கரிசணையை கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பும், மோடியின் அணுகுமுறையும் இதற்கு சான்றாகும்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ரணில்தான் என்பது பிரதமர் மோடிக்கும் தெரிந்துள்ளது.” – என்றார்.