ராகலை புரூக்சைட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் தோட்ட தொழிலாளர்கள் புரூக்சைட் பகுதியில் உடப்புசலாவை- நுவரெலியா வீதியில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் (14) காலை 10.30 மணியலவில் ஈடுப்பட்டனர்.

இராலை புரூக்சைட் சிறு நகர பகுதியில் வரலாற்று அடையாளமாக காணப்படும், இலங்கை புகையிரத சேவை திணைக்களத்திற்கு உரித்தான பழமை வாய்ந்த விடுதியை, வர்த்தகர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புரூக்சைட் தோட்ட தொழிலாளர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன் போது கட்சி பேதமின்றி வீதிக்கு களம் இறங்கிய தொழிலாளர்கள் தமது எதிர்ப்பினை கோஷமிட்டும், கோரிக்கைகளை சுலோகங்களில் எழுதி ஏந்தியும் எதிர்ப்பு நடவடிக்கையை சுமார் ஒரு மணிநேரம் முன்னெடுத்தனர்.

இலங்கை காலணித்துவ ஆட்சியாளர்களின் ஆட்சியில் இருந்த காலத்தில் 1847 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானு ஓயா தொடக்கம் இராகலை வரை புகையிரத சேவை காணப்பட்டது.

இதன்போது கந்தப்பளை நகரம் மற்றும் புரூக்சைட் பகுதியில் தேயிலை பெட்டிகளை சரக்கு ரயிலில் நானு ஓயா பிரதான ரயில் நிலையம் ஊடாக கொழும்புக்கு கொண்டு செல்ல புகையிரத நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு நானு ஓயா தொடக்கம் இராகலை வரை அமைக்கப்பட்டிருந்த கந்தப்பளை மற்றும் புரூக்சைட் இராகலை புகையிரத நிலையங்கள் காலப்போக்கில் சேவை நிறுத்தம் காரணமாக இயங்காமல் போனது. ஆனால் புகையிரத சேவை இடம்பெற்றமைக்கான தடயங்கள் மற்றும் பழைமை வாய்ந்த புகையிரத நிலைய கட்டடங்கள் இன்றும் இப்பகுதியில் பாழடைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் புரூக்சைட் பகுதியில் காணப்பட்ட இலங்கை புகையிரத சேவைக்கு உரித்தான இரண்டு கட்டடங்களில் ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டு அதில் ஒருவர் மதுபான சாலையை அமைத்திருந்தார். இதுவும் புரூக்சைட் பிரதேச வாசிகளின் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் காலப்போக்கில் இனந்தெரியாத முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.

அதேநரத்தில் புரூக்சைட் பகுதியில் 1847 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட புகையிரத கட்டுப்பாட்டாளர் விடுதி இப்பகுதியில் இன்றுவரை பாழடைந்த நிலையில் வரலாற்று சின்னமாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில் இந்த விடுதியை இராகலை புரூக்சைட் தோட்ட மக்கள் அரசாங்க திணைக்களங்களின் சேவைகளை முன்னெடுக்க, அல்லது பாலர் பாடசாலை அமைக்க இக் கட்டடத்தை சீர்த்திருத்தி தருமாறு மாறி மாறி வந்த அரசாங்களுக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இப்போது இக் கட்டடத்தை இராகலை நகரில் வட்டிக்கு பணம் வழங்கும் நபர் ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் மது விற்பணையுடன் உணவு விடுதி ஒன்றை அமைக்க வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அறிந்த புரூக்சைட் தோட்ட மக்கள் வீதிக்கு இறங்கி தனி நபருக்கு இக்கட்டத்தை வழங்காது பொது மக்களின் அரச சேவைக்கு வழங்குமாறு கோரிக்கையை முன் வைத்து ஆரம்பகட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ஆ.ரமேஸ்.

Related Articles

Latest Articles