தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக 1700 ரூபா வர்த்தமானி ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையின் ஒரு தீர்மானமாக இந்த 1700 ரூபா அமைந்திருக்கின்றது. எனவே இது ஒரு சட்ட ரீதியான செயற்பாடு என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
நேற்றுமாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தோட்ட கம்பனிகள் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமான 1700 ரூபாவை வழங்காவிட்டால் அல்லது வழங்க முடியாவிட்டால் , வழங்காமல் அவர்கள் இதனை உதாசீனம் செய்தால் அவர்கள் தண்டனைக்குறிய குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.
அது மாத்திரமல்ல 1992 ஆம் ஆண்டு தோட்டங்கள் அதனை நடத்துவதற்காக அரசாங்கத்தினால் இவ்வாறு தனியார் கம்பனிகளுக்கு பாரம் கொடுக்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை நட்டம் என்ற வார்த்தையை தான் சொல்லி கொண்டு வருகின்றனவே ஒழிய எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தோட்டங்கள் இலாபம் அடைந்ததாக அவர்கள் சொல்லவில்லை.
அப்படி என்றால் எந்த ஒரு நிறுவனமும் 32 வருடங்கள் தொடர்ச்சியாக நட்டம் என்றால் அவர்களால் அந்த வியாபாரத்தை தொடர்ச்சியாக முன் கொண்டு செல்ல முடியுமா ? முடியாது. ஆகவே இதிலிருந்து தெரிகின்றது தோட்ட கம்பனிகள் நட்டம் என்று போலியான அந்த விடயத்தை தான் முன் வைக்கின்றார்களே ஒழிய எந்த ஒரு இடத்திலும் இலாபம் என்று சொல்லவில்லை.
அந்த வகையில் தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமான 1700 ரூபாவை அவர்கள் வழங்கியே ஆக வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் தண்டனைக்குரிய குற்றமாக அது அமையும். ஏதோ ஒரு காரணத்துக்காக அதை வழங்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டால் அவர்கள் தோட்டங்களை மீண்டும் அரசாங்கத்திடம் கொடுத்து விட்டு வீட்டை நோக்கி செல்ல வேண்டி வரும்” என அவர் தெரிவித்தார்.
ராமு தனராஜா
