ஒற்றையாட்சியை பாதுகாத்து, சமாதானத்தை ஏற்படுத்த முற்பட்டதாலேயே மஹிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளியாக்கப்பட்டார் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அதை வழங்குவோம், இதை வழங்குவோம் என தற்போது கூறுகின்றனர். அவ்வாறு வழங்குவதாயின் படையினர் எதற்கு உயிர் தியாகம் செய்திருக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச கூறியவை வருமாறு,
“ போரை முடிப்பதற்கு குருணாகலை மாவட்டத்தில் உள்ள பெற்றோரே அதிகளவு பிள்ளைகளை படைகளுக்கு அனுப்பி வைத்தனர். எனவே, குருணாகலை மாவட்டத்துக்கு எமது இதயத்தில் தனி மரியாதையுண்டு.
சமாதானம், போர் நிறுத்தம், பேச்சு வார்த்தை, ஒப்பந்தம் என்றெல்லாம் பல தலைவர்கள் அரசியல் மேடைகளில் உறுதியளித்தனர். இவற்றை மஹிந்த ராஜபக்ச தனது அரசியல் மேடையில்; இருந்து நீக்கினார். இராணுவத்தின் அர்ப்பணிப்புடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச நாட்டை பொறுப்பேற்கும்போது போர் நிலவியது. சமாதான ஒப்பந்தம் செய்து அப்போரை முடிவுக்கு கொண்டுவர முற்படுவோம் என சிலர் கூறினர். அவ்வாறானவர்கள் எம்முடன் இருந்தனர். தற்போது சிலர் இது போதும் அதை வழங்கிவிடுவோம் எனக் கூறிவருகின்றனர்.
அவ்வாறு வழங்குவதாயின் எதற்காக ஆயிரக்கணக்கான படையினர் உயிரிழந்தனர்? மஹிந்த ராஜபக்ச ஏன் போர்க்குற்றவாளியாக்கப்பட்டார்? சமாதானத்தை கொண்டுவரபோய்தான் இது நடந்தது.
அரசமைப்பின் பிரகாரம் வழங்கவேண்டுமெனில் பிரபாகரனுக்கும் வழங்கி இருக்கலாம்தானே? நீங்கள் அங்கே இருங்கள், நான் இங்கே இருக்கின்றேன், இருவரும் சமரசமாக செல்வோம் எனக் கூறி அதை செய்திருக்கலாம். அவ்வாறு செய்யக்கூடாது, ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டும். தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தின் கௌரவத்தைக் காக்க வேண்டும். அந்த பொறுப்பை நாம் ஏற்போம்.” –என்றார் நாமல் ராஜபக்ச.