ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் நான் இணையபோவதில்லை. எனினும், நாட்டுக்காக பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் பதவியை ஏற்காது தனது பொறுப்பை சஜித் பிரேமதாச நிறைவேற்ற தவறிவிட்டார் எனவும் அவர் கூறினார்.
ரோஹித அபேகுணவர்தனவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,
“ நானும், மஹிந்தவும் இரு அணிகளில் இருந்தோம். ஓன்றாக இணையவில்லை. எல்லா இடங்களிலும் எதிர்ப்பு அரசியலிலேயே ஈடுபட்டோம். சமரை கைவிட்டதில்லை. மஹிந்தவை விடவும் சந்திரிக்காவுடன் எனக்கு சமர் இருந்தது. ஆனால் சந்திரிக்காவுடன் இருக்கும்போது எவரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் மஹிந்தவுடன் இருக்கும்போது கேட்கின்றனர். அதற்கான பதிலையும் வழங்குகின்றேன்.
மஹிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னர், பிரதமர் பதவியை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அந்த பொறுப்பை அவர் நிறைவேற்றவில்லை. எனது நண்பர் அநுரகுமார திஸாநாயக்கவும் காணாமல்போய்விட்டார். இரு நாட்களாக பிரதமர் பதவிக்கு எவரும் இருக்கவில்லை. பிரதமர் பதவி வேண்டுமா, வேண்டுமா என உலகில் வேறு நாடுகளில் இவ்வாறு கேட்கப்படுவதில்லை.
சஜித் பிரதமர் பதவியை ஏற்றிருந்தால் அவருக்கு நான் ஒத்துழைப்பு வழங்கி இருப்பேன். அதில் எனக்கு பிரச்சினை கிடையாது.
நாடு விழும் சமயங்களில் இணைந்து செயற்பட வேண்டிய பொறுப்பு பிரதான கட்சிகளுக்கு உள்ளது. அரசியலில் நாம் மோதிக்கொண்டிருந்தாலும் ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மற்றைய கட்சிக்கு ஜனநாயகமுறைப்படி ஆட்சி கையளிக்கப்பட்டுவந்துள்ளது. எம்மிடம் பல குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் அதிகாரத்தை கையளித்துவிட்டு செல்லும் பக்குவம் உள்ளது. ஆசியாவில் இலங்கையில் மட்டும்தான் அப்படி நடந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்வின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எனக்கு ஆதரவு வழங்கியது. அந்த ஆதரவை ஏற்றது தவறா? ஐக்கிய மக்கள் சக்தியிலும் ஒரு பிரிவினர் வாக்களித்தனர்.
பொருளாதாரத்தை முன்னோக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனை தற்போது செய்துள்ளேன். மொட்டு கட்சியின் ஆதரவை பெறாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? டொலர் 450 ஐ தாண்டிஇருக்கும். எரிபொருள் அல்ல தேங்காய் எண்ணெய்கூட இருந்திருக்காது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, அமைச்சரவையின் ஒத்துழைப்பு இன்றி என்னால் தனித்து இதனை செய்திருக்க முடியாது. நான் மொட்டு கட்சியில் இணையபோவதில்லை. மொட்டு கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையபோவதில்லை. ஆனால் புதிதாக நாம் சிந்திக்க வேண்டும். நெருக்கடியான நேரங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.’’- என்றார்.
