ஒற்றையாட்சியை காட்டிக்கொடுக்க தயாரில்லை!

கட்சியின் அடிப்படைக் கொள்கைகளையும், ஒற்றையாட்சியையும் காட்டிக்கொடுப்பதற்கு தயாரில்லை என்று அறிவித்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையிலேயே சிலருக்கு 19 ஆவது திருத்தச்சட்டம் நினைவுக்கு வந்துள்ளது எனவும், எந்த வகையிலும் தேர்தலை பிற்போட இடமளியோம் எனவும் நாமல் ராஜபக்ச இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அறகலயவை முன்னின்று நடத்தியவர்களில் சிலர் அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர், வன்முறை மூலம் அல்ல, ஜனநாயக வழியிலேயே ஆட்சியை பிடிக்க முடியும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

அதேபோல அறிவிருந்தும், தெளிவிருந்தும் சில இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டமை கவலையளிக்கின்றது. ஒரு கட்சியாக எந்தவொரு சவாலையும் ஏற்பதற்கு நாம் தயார். கட்சியின் அடிப்படைக்கொள்கையை காட்டிக்கொடுக்ககூடாது, ஒற்றையாட்சியையும் காட்டிக்கொடுக்க கூடாது.

ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்தான் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பில் சிலருக்கு நினைவு வந்துள்ளது. 20 மற்றும் 21 ஆவது திருத்தச்சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அதுவரை அவர்களுக்கு 19 பற்றி நினைவில்லைபோலும். இப்படியான புத்திஜீவிகளும் எமது நாட்டில் உள்ளனர். தேர்தல் நெருங்கும்வேளையிலேயே 5 வருடங்களா, 6 வருடங்களா என்ற சிந்தனைகூட சிலருக்கு எழுகின்றது.

எது எப்படி இருந்தாலும் தேர்தலை பிற்போடுவதற்கு நாம் எதிர்ப்பு. அதற்கு இடமளிக்கமாட்டோம். அதேவேளை தேசிய வளங்களை நாம் பாதுகாப்போம். அவற்றை மேம்படுத்துவதற்குரிய முதலீடுகள் கொண்டுவரப்படும். ” –என்றார்.

Related Articles

Latest Articles