தமிழ் மக்களுக்கு இராணுவம்மீது வைராக்கியம் உள்ளதெனில் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்களா? சர்வதேச சட்டதிட்டங்களுக்கமையவே போர் நடத்தப்பட்டது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
போரில் இறுதி கட்டத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும் அதனால்தான் அதிகளவு படையினரை இழக்க நேரிட்டது எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மனிதாபிமான நடவடிக்கையின்போது (போர்) 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படுவதை ஏற்கமுடியாது. போரை திரிவுபடுத்திகூறி நன்மையடையும் சிலர் உள்ளனர். அவர்கள்தான் இவ்வாறான கருத்துகளை முன்வைக்கின்றனர்.
போர் முடிவடைந்து 6 மாதங்களின் பின்னர் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன். தமிழ் மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். மக்கள் அவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் இப்படி ஆதரவு வழங்கி இருப்பார்களா? இராணுவம்மீது வைராக்கியம் இருந்திருந்தால் வாக்களித்திருப்பார்களா?
புலிகள் மக்களை பணயக்கைதிகளாக பிடித்து தமது இருப்பை தக்க வைக்க முற்பட்டனர். ஆனால் நாம் மக்களை பாதுகாத்து போரை முடித்தோம்.
போரின் இறுதி கட்டத்தில் 10, 15 கிலோமீற்றருக்குள் மக்கள் முடங்கியபோது நாம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. சிறு ஆயுதங்களை பயன்படுத்தியே போரிட்டோம். அதனால்தான் குறுகிய காலப்பகுதிக்குள் 2 ஆயிரம் படையினரை இழக்க நேரிட்டது.
போரில் முன்களத்தில் எவ்வித குற்றச்செயல்களும் இடம்பெறவில்லை. போர் முடிந்த பிறகு இடம்பெற்ற ஓரிரு சம்பவங்கள் உள்ளன. இரு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தேன். ஆனால் இரு மாதங்களில் நான் பதவி விலகிவிட்டதால் விசாரணை தொடரவில்லை. எது எப்படி இருந்தாலும் சர்வதேச விதிமுறைகளின் பிரகாரமே போர் செய்தோம்.” – என்றார்.
